Last Updated:
மத்திய அரசின் திட்டங்களால் 3 கோடி பெண்களை லட்சாதிபதியாக மாற்றியதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
மத்திய அரசின் திட்டங்களால் நாடு முழுவதும் மூன்று கோடிக்கும் மேற்பட்ட பெண்களை லட்சாதிபதியாக மாற்றியிருப்பதாக பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 18 ஆயிரத்து 300 கோடி ரூபாயிலான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, புதிதாக இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், அரசியல், நிர்வாகம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை என ஒவ்வொரு துறையிலும் பெண்கள் புதிய உத்வேகத்துடன் முன்னேறி வருவதாக மகிழ்ச்சி தெரிவித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு, மூன்று கோடி பெண்களை லட்சாதிபதியாக ஆக்கும் திட்டத்தை தொடங்கியபோது அதை ஒரு சிலர் விமர்சித்த நிலையில், தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் மூன்று கோடி பெண்களை லட்சாதிபதியாக மாற்ற இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும் கூறினார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை திரிணமுல் காங்கிரஸ் தலைமையிலான மேற்குவங்க அரசு அவமதித்து விட்டதாகவும், இதனை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார். முன்னதாக மகளிர் தினத்தையொட்டி பெண்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.


