Last Updated:
நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.
2005-ஆம் ஆண்டு முதல் பிகார் மாநில முதலமைச்சராக இருந்து வருகிறார் நிதிஷ் குமார். 2014- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் மோசமான தோல்வி காரணமாக 9 மாதங்கள் முதலமைச்சர் பதவியை ஜிதன் ராம் மஞ்சியிடம் ஒப்படைத்திருந்தார். அதன் பிறகு தொடர்ந்து முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்து வருகிறார்.
அடிக்கடி கூட்டணிகளை மாற்றி இரண்டு முறை ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணிக்கு சென்றுவிட்டு மீண்டும் பாஜகவுக்குத் திரும்பினார். ஐக்கிய ஜனதா தளம் கட்சி மாநிலத்தில் தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வந்தபோதிலும், நிதிஷ் குமார் தான் பிகார் முதலமைச்சராக இருப்பார். கடந்த ஆண்டு பிகாரில் நடந்த தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதில் பாஜக மட்டும் 89 இடங்கள் வென்றது. நிதிஷ் குமார் கட்சி 84 தொகுதிகளை கைப்பற்றியது.
பாஜக தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்தாலும் ஆட்சி அதிகாரத்தை நிதிஷ் குமார் கையில் ஒப்படைத்தது. இதற்கு காரணம் தேர்தலுக்கு முன், நிதிஷ் குமாரை முதலமைச்சர் வேட்பாளர் என அறிவித்து பரப்புரை மேற்கொண்டதுதான். ஆனால் இப்போது அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் டெல்லி அரசியலை நோக்கி நகர்கிறார். இதற்காக அவர் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே நிதிஷ் குமாரின் உடல்நிலை குறித்த தகவல்கள் விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றன. 75 வயதாகும் அவருக்கு, மாநில நிர்வாகத்தின் கடும் அழுத்தத்தைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், பிகாரில் நீண்டகாலமாக நிதிஷ் குமாருக்கு ஆதரவு அளித்து வரும் பாஜக, இப்போது அங்கு தனது சொந்த முதலமைச்சரை அமர்த்த விரும்புகிறது. நிதிஷ் குமார் விலகுவதால், பிகார் வரலாற்றில் முதல்முறையாக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராகப் பதவியேற்பார்.
இந்த பட்டியலில் முன்னணியில் இருப்பது தற்போது பிகார் மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருக்கும் சாம்ராட் சவுத்ரி. அடுத்தபடியாக பிகார் மாநில அமைச்சராக இருக்கும் திலிப் குமார் ஜெய்ஸ்வாலுக்கும் முதலமைச்சராகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மாநிலத்தில் இருந்து டெல்லி அரசியல் நோக்கி நிதிஷ் நகர்ந்தாலும், மாநிலத்தில் தனது பிடி எப்போதும் இருக்க வேண்டும் என்பதுபோல், தனது மகனை அரசியலுக்குள் கொண்டுவந்துள்ள நிதிஷ் குமார். இத்தனை வருடங்களாக கட்சியில் உறுப்பினராகக்கூட இல்லாமல் இருக்கும் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் இன்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நிஷாந்த் குமார், “அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்ற முயற்சிப்பேன். கடந்த 20 ஆண்டுகளில் என் தந்தை செய்ததை நினைத்து நான், முழு பிகார் மற்றும் முழு நாடும் பெருமைப்படுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், நிஷாந்த் குமாரும் நிதிஷ் குமாரை போலவே, பிகார் சட்டமேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என தெரிகிறது.


