குவாந்தான் | மார்ச் 08, 2026:
நாடு முழுவதும் நடைபெற்று வரும் ‘ஆப் பாந்தாவ்’ (Ops Pantau) அதிரடி சோதனையில், பல்வேறு விதிமீறல்களுக்காக இதுவரை 532 உடனடி அபராதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை துணை அமைச்சர் டத்தோ டாக்டர் புசியா சாலே தெரிவித்துள்ளார்.
மார்ச் 6 வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, மொத்தம் RM143,000-க்கும் அதிகமான தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என்றும், மளிகைக் கடைகள், ரமலான் சந்தைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் என மொத்தம் 36,510 இடங்கள் சோதனையிடப்பட்டன என்றும், இதுவரை பொதுமக்கள் தரப்பிலிருந்து 892 புகார்கள் பெறப்பட்டுள்ளன என்றும் அவர் சொன்னார்.
இந்த நடவடிக்கையில் விலைப்பட்டியலை (Price tags) காட்சிப்படுத்தத் தவறுதல், போலியான பொருட்களை அசல் என விற்பனை செய்தல், முத்திரை பதிக்கப்படாத அல்லது சரிபார்க்கப்படாத தராசுகள் மற்றும் அளவீட்டு கருவிகளைப் பயன்படுத்துதல் போன்ற முக்கிய காரணங்களுக்காக விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.
ரமலான் சந்தைகளில் இதுவரை பினாங்கு, திரெங்கானு மற்றும் சரவாக் உட்பட வெறும் 8 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
பகாங் மாநிலத்தில் மஹ்லோட்டா ஸ்கொயர் (Mahkota Square) உட்பட 7 இடங்களில் ரஹ்மா ரமலான் சந்தைகள் செயல்படுகின்றன. இங்கு குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்காக 5 ரிங்கிட் மற்றும் அதற்குக் குறைவான விலையில் சரிவிகித உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாகப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுவது குறித்துப் பேசிய அவர், இதுவரை அசாதாரண விலை உயர்வு ஏதும் கண்டறியப்படவில்லை என்றும், இது தொடர்பாகப் புகார்கள் ஏதும் வரவில்லை என்றும் கூறினார். விலை உயர்வு இருந்தால் பொதுமக்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம் என அவர் கேட்டுக்கொண்டார்.




