சிரம்பான் | மார்ச் 08, 2026:
சுமார் 1.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நில விற்பனை மோசடியில் ஈடுபட்டதாகக் சந்தேகிக்கப்படும் பிரபல நடிகை மற்றும் அவரது கணவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் காவல் (Remand) இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை ஹுலு லங்காட்டில் (Hulu Langat) உள்ள ஒரு மதராஸாவில் ஒளிந்திருந்த போது இந்தத் தம்பதியினர் கைது செய்யப்பட்டனர் என்று , சிரம்பான் மாவட்டக் காவல்துறைத் தலைவர், அசிஸ்டண்ட் கமிஷனர் அசார் அப்துல் ரஹீம் தெரிவித்தார்.
இவர்களது முந்தைய போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், விசாரணையை முழுமையாக முடிக்க இன்று காலை நீதிமன்றத்தில் மீண்டும் விண்ணப்பிக்கப்பட்டு ஒரு நாள் கூடுதல் தடுப்புக்காவல் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது நெகிரி செம்பிலானில் மட்டும் மூன்று வெவ்வேறு நபர்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன. இதில் இரண்டு வழக்குகள் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420-ன் (ஏமாற்றுதல்) கீழ் விசாரிக்கப்படுகின்றன.
இங்கு விசாரணை முடிந்ததும், மற்ற மாநிலங்களிலும் இவர்கள் மீது புகார்கள் இருப்பதால், அந்தந்த மாநிலக் காவல்துறையினரிடம் இவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘Threads’ சமூக வலைதளத்தில் ஒரு அழகு சாதனப் பொருள் பெண் தொழிலதிபர், இந்தத் தம்பதியினர் தன்னிடம் 300,000 ரிங்கிட் மோசடி செய்ததாகப் பதிவிட்டுள்ளார். மேலும் பலரிடம் இவர்கள் மில்லியன் கணக்கில் சுருட்டியிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நடிகை பல தொலைக்காட்சி நாடகங்களில் (Dramas) நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணைக் கோப்புகளை முடித்து அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கக் காவல்துறை தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.




