Last Updated:
IRIS Lavan கப்பல் தொழில்நுட்பக் கோளாறால் கொச்சி துறைமுகத்தில் தஞ்சம் புகுந்தது. 183 ஈரானிய வீரர்கள் இந்தியக் கடற்படை வசதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். IRIS Dena கப்பல் இலங்கை அருகே மூழ்கியது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது போர் தொடுத்துள்ள நிலையில், ஈரானின் போர்க்கப்பலான IRIS Lavan இந்தியாவின் கொச்சித் துறைமுகத்தில் பாதுகாப்பாகத் தஞ்சம் புகுந்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் நடந்த சர்வதேசக் கடற்படை அணிவகுப்பில் பங்கேற்றுவிட்டுத் திரும்பியபோது, கடந்த பிப்ரவரி 28 அன்று, ஈரானியக் கப்பலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறி, அதை அவசரமாகக் கொச்சி துறைமுகத்தில் நிறுத்த அனுமதிக்குமாறு ஈரான் தரப்பு இந்தியாவைக் கேட்டுக்கொண்டது.
மனிதாபிமான அடிப்படையில், இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திய அரசு, மார்ச் 1ஆம் தேதி கப்பல் வந்து சேர அனுமதி அளித்தது. அதன்படி, மார்ச் 4 அன்று ‘IRIS Lavan’ கொச்சி வந்தடைந்தது. இந்தக் கப்பலில் இருந்த 183 ஈரானியக் கடற்படை வீரர்கள் தற்போது கொச்சியில் உள்ள இந்தியக் கடற்படை வசதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது.
மேலும் இதே அணிவகுப்பில் பங்கேற்றுத் திரும்பிய மற்றொரு ஈரானியக் கப்பலான ‘IRIS Dena’, கடந்த புதன்கிழமை இலங்கை அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது. இதில் 87 வீரர்கள் உயிரிழந்த நிலையில், ‘IRIS Lavan’ கப்பல் இந்தியாவிடம் தஞ்சம் புகுந்ததால் பாதுகாப்பாக உள்ளது.
Kochi [Cochin],Ernakulam,Kerala
Mar 07, 2026 10:21 AM IST


