Last Updated:
Israel-Iran War | எரிபொருள் விலை உயரும் அபாயமும் உருவாகியிருக்கும் சூழலில், கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டால், அதை சமாளிப்பது எப்படி என்பது பற்றி இந்தியா தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியிருப்பதால், 37 இந்திய கப்பல்கள் சிக்கி உள்ளன. இந்த நிலையில், எரிசக்தியின் இருப்பு குறித்து தினமும் இருமுறை ஆய்வு செய்யப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்திய நிலையில், பதிலுக்கு ஈரான் ராணுவமும் தாக்குதலை தொடுத்து வருகிறது. மேலும், தங்கள் நாட்டின் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாகவும் ஈரான் அறிவித்தது. உலகின் மொத்த கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீத போக்குவரத்து ஹோர்முஸ் நீரிணை பகுதியிலேயே நடைபெறும் சூழலில், அந்த வழியாக கப்பல்கள் சென்றால் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தது ஈரான். இதனால் அந்த பகுதியைச் சுற்றியுள்ள பெர்சியா வளைகுடா, ஓமன் வளைகுடா பகுதிகளில் 37 இந்திய கப்பல்கள் சிக்கி உள்ளதாக இந்திய கப்பல் உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்தது.
அவற்றில் 1,109 பேர் உள்ள நிலையில், அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவுக்கு வர்த்தக ரீதியான அச்சுறுத்தல்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. போர் சூழல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளுக்கும் எரிபொருளை விநியோகிப்பதில் இடையூறு ஏற்பட்ட நிலையில், எரிபொருளை சிக்கனப்படுத்தும் நடவடிக்கையை பிற நாடுகள் கையில் எடுத்துள்ளன. அதன்படி, டீசல் உள்ளிட்ட எரிபொருள் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு சீன அரசு உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க, பாகிஸ்தான் முழுவதும் அனைத்து விதமான ஊழியர்களும் வீட்டில் இருந்து பணியாற்றும் கொள்கை முறையை அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. போர் சூழலால், கத்தார், சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்கான எல்பிஜி இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. திரவ இயற்கை எரிவாயுக்கான தேவையை ஆண்டுக்கு 40 சதவீதம் கத்தாரிலிருந்து இந்தியா பெற்று வந்த நிலையில், தற்போது அதற்கான விநியோகமும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
எரிபொருள் விலை உயரும் அபாயமும் உருவாகியிருக்கும் சூழலில், கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டால், அதை சமாளிப்பது எப்படி என்பது பற்றி இந்தியா தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதேசமயம், இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 25 நாட்களுக்கான கச்சா எண்ணெய், 25 நாட்களுக்கான மூலப்பொருட்கள் என 50 நாட்களுக்கு இருப்பு உள்ளதாகவும், எரிசக்தியின் இருப்பு குறித்து தினமும் இருமுறை ஆய்வு செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு எரிவாயுவை இறக்குமதி செய்ய ஆஸ்திரேலியா, கனடா நாடுகள் முன்வந்துள்ள நிலையில், பிற நாடுகளிடமும் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. போர் சூழல் தொடர்ந்தால், இந்தியா தனது எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்வதில் கடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றே தெரிகிறது. இதனிடையே கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள MRPL நிறுவனம் தனது ஒரு கச்சா எண்ணெய் பிரிவையும், சில இரண்டாம் நிலை பிரிவுகளையும் மூடியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


