Last Updated:
குஜராத் மாநிலம் சூரத்தில் விற்பனைக்கு தயாராக வைத்திருந்த 3 லட்ச ரூபாய் மதிப்பிலான கலப்பட பனீரை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் சூரத்தில் பாமாயில் மற்றும் அசிட்டிக் அமிலத்திலிருந்து போலி பனீர் தயாரித்து வந்த தொழிற்சாலையை உணவு பாதுகாப்புத் துறையினர் கண்டுபிடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விற்பனைக்கு தயாராக வைத்திருந்த 3 லட்ச ரூபாய் மதிப்பிலான கலப்பட பனீரையும் பறிமுதல் செய்துள்ளனர். ஹோலி கொண்டாட்டங்களில் நஞ்சை கலந்த போலி பனீர் ஆலையின் திடுக்கிடும் பின்னணி என்ன?
புரதம் நிறைந்த ஒரு சத்தான சைவ உணவு பனீர். நான் வெஜ் விரும்பாத உணவுப் பிரியர்களுக்கு பனீர் பட்டர் மசாலா, பாலக் பனீர், பனீர் டிக்கா உள்ளிட்ட டிஷ்களே ஸ்பெஷலான ஒன்று. அப்படிப்பட்ட பனீரை போலியாக தயாரித்து வடமாநிலங்களை அலறவிட்ட கும்பலை உணவுப் பாதுகாப்புத் துறையினர் கூண்டோடு கைது செய்துள்ளனர். பல லட்ச ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களுடன் இயங்கிவந்த போலி பனீர் தொழிற்சாலையும்… பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரத்து 400 கிலோ கலப்பட பனீரும்… நடந்தது என்ன…?
குஜராத்தில் கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகையின்போது குறிப்பிட்ட சில பிராண்டுகளில் தயாரித்து விற்கப்பட்ட பனீரை சாப்பிட்டு சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. பிரச்சனைக்குக் காரணமான பனீரை ஸ்மெல் செய்து பார்த்ததில் பாமாயில் எண்ணெயின் வாடையே வீசியுள்ளது. பனீரில் பாமாயிலா? என்னடா இது என அதிர்ச்சி அடைந்த சிலர், அம்மாநில உணவுப் பாதுகாப்புத் துறையினரிடம் புகார் அளித்தனர்.
உடனடியாக விசாரணையில் இறங்கிய அதிகாரிகள், குஜராத் மாநிலம் சூரத்தின் பண்டேசரா தொழிற்சாலை பகுதியில் இயங்கிவந்த பனீர் ஆலையில் அதிரடி ரைடு நடத்தினர். கட்டி கட்டியாக தயாரித்து வைக்கப்பட்டிருந்த பனீரை ஆய்வுக்கு உட்படுத்தினர். அது முழுக்க முழுக்க போலியாக, பாமாயிலும் அசிட்டிக் அமிலமும் கலந்து தயாரிக்கப்பட்ட பனீர் என கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக ஆலை உரிமையாளர் மகேஷ்குமார் சர்மாவை கைது செய்து விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 401 கிலோ கலப்பட பனீரை பறிமுதல் செய்தனர். அவற்றின் மார்க்கெட் மதிப்பு 3 லட்ச ரூபாய் இருக்கும். அதேபோல 25 லட்ச ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
அசிடிக் அமிலத்தால் தயாரிக்கப்பட்ட பனீர்… ரூ.3 லட்சம் மதிப்பிலான கலப்பட பனீர் பறிமுதல்… ஆலையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்…


