ஷா ஆலாம் | மார்ச் 05, 2026:
முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங், முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ சுரைடா கமாருதீனுக்கு எதிராகத் தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு, சிலாங்கூர் பெஸ்தாரி ஜெயாவில் உள்ள முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுத் திட்டத்தை லிம் குவான் எங் இரண்டு முறை நிராகரித்ததாகச் சுரைடா குற்றம் சாட்டியிருந்தார். அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசு 200 வீடுகளைக் கட்டப்போவதாக அறிவித்த பிறகு, பழைய திட்டத்தை லிம் குவான் எங் தடுத்ததாகச் சுரைடா கூறிய கருத்துக்களுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டது.
லிம் குவான் எங் அத்திட்டத்தை நிராகரித்ததாகச் சுரைடா கூறிய புகார்கள் ஆதாரமற்றவை மற்றும் பொய்யானவை என்று நீதிமன்றம் உறுதி செய்தது.
சுரைடா, லிம் குவான் எங்கிற்கு 50,000 ரிங்கிட் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அத்தோடு பிரதிவாதிகள் அனைவரும் இணைந்து 5,000 ரிங்கிட் வழக்குச் செலவை வழங்க வேண்டும்.
இந்த அவதூறு செய்தியைச் சுரைடா அல்லது அவரது தரப்பினர் மீண்டும் வெளியிடவோ அல்லது பரப்பவோ கூடாது என நீதிமன்றம் நிரந்தரத் தடை விதித்துள்ளது.
முன்னாள் அமைச்சர்களுக்கிடையிலான இந்த சட்டப் போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. தொழிலாளர்களின் வீட்டுத் திட்டத்தில் தாம் முட்டுக்கட்டை போடவில்லை என்பதை இந்தத் தீர்ப்பின் மூலம் லிம் குவான் எங் நிரூபித்துள்ளார்.




