Last Updated:
Pana Kilangu| மதுரை சிம்மக்கல் பகுதியில் 10 பனங்கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.50க்கும், சற்று பெரியதாக 15 பனங்கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை நகரின் முக்கிய வர்த்தக மையமான சிம்மக்கல் பகுதியில் பனங்கிழங்கு சீசன் தொடங்கியதை தொடர்ந்து விற்பனை சூடுபிடித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் தொடங்கும் பனங்கிழங்கு விற்பனை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உச்சத்தை எட்டும் நிலையில் தற்போது சந்தைகளில் விற்பனை அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விளையும் பனங்கிழங்குகள், குறிப்பாக ராமேஸ்வரம் பகுதியில் இருந்து அதிகளவில் கொண்டு வரப்பட்டு மதுரை சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. செம்மண் நிலத்தில் இயற்கையாக முளைக்கும் பனை விதைகளில் இருந்து உருவாகும் இந்த கிழங்கு, கிராமத்து சுவையை நகர மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் பாரம்பரிய உணவாகும்.
மேலும் பனங்கிழங்கு உடல்நலத்திற்கும் பல்வேறு நன்மைகளை வழங்கும் உணவுப் பொருளாகும். இதில் அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்திற்கு உதவுவதுடன், உடல் சூட்டை தணிக்கவும் உடலுக்கு சக்தி அளிக்கவும் உதவுகிறது. தற்போது சிம்மக்கல் பகுதியில் 10 பனங்கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.50க்கும், சற்று பெரியதாக 15 பனங்கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆறு மாதங்கள் பனங்கிழங்கையும், அடுத்த ஆறு மாதங்கள் வேர்கடலையையும் விற்பனை செய்து வாழ்வாதாரம் நடத்தும் வியாபாரிகள், இந்த சீசனில் விற்பனை நல்ல அளவில் நடைபெறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். பனங்கிழங்கு சீசன் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்லும் காட்சி சிம்மக்கல் சந்தையில் காணப்படுகிறது.
Mar 05, 2026 10:38 AM IST

