ஷா ஆலம் | மார்ச் 05, 2026:
காப்பாரில் உள்ள மேரு காவல் நிலையத்தின் உள்ளேயே இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, 28 முதல் 41 வயதுக்குட்பட்ட எட்டு பேரைச் சிலாங்கூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒரு வீட்டுத் திட்டத்தின் (Housing project) பாதுகாப்புச் சேவைகளை (Security services) தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தொடர்பாக இந்த இரு குழுக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது என்றும், ஆரம்பகட்ட விசாரணையில், மோதலில் ஈடுபட்டவர்கள் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்றும், அவர்கள் ரகசிய கும்பல்களை (Secret Societies) சேர்ந்தவர்கள் என்றும் நம்பப்படுகிறது என்றும், சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் (Datuk Shazeli Kahar) இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த திங்கட்கிழமை (மார்ச் 2) அன்று இந்த மோதல் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல் நிலையத்தின் உள்ளேயே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு மோதலில் ஈடுபட்டது காவல்துறையினரின் மீதான சவாலாகப் பார்க்கப்பட்டது.
சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து மூன்று வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 8 சந்தேக நபர்கள் பிடிபட்டனர்.
விசாரணையை முன்னெடுப்பதற்காக இவர்கள் அனைவரும் நாளை மற்றும் நாளை மறுதினம் வரை போலீஸ் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளனர்.
“காவல் நிலைய வளாகத்திற்குள் இதுபோன்ற அநாகரிகமான செயல்களைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று டத்தோ ஷசெலி கஹார் எச்சரித்துள்ளார்.




