Last Updated:
இரண்டு முறை சிறை சென்றுவந்தவர், மனைவி மற்றும் மாமியாரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பதைபதைக்க வைத்துள்ளது.
ஆந்திராவில் குடும்ப சண்டையில் மனைவி மற்றும் மாமியாரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. கணவனை பிரிந்து மூன்று குழந்தைகளையும் பரிதவிக்கவிட்டு சென்றதால் இருவரின் உயிர் பறிபோயுள்ளது. நடந்தது என்ன?
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பொப்பில்லங்கா கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராமராஜு. 36 வயதான இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு லதா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். குழந்தை குட்டிகளுடன் இல்லற வாழ்க்கை இனிமையாக சென்ற நிலையில், திருமண பந்தத்தை மீறிய சந்தேகத்தால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சீதாராமராஜு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவர், பாலியல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, வட்டித் தொழிலை அவருடைய மனைவி லதா கவனித்து வந்துள்ளார்.
சிறையில் இருந்து வெளியில் வந்த சீதாராமராஜுக்கு தனது மனைவி லதாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து, நாள்தோறும் அடித்து துன்புறுத்தியுள்ளார். வீட்டிற்குள் புகைந்த சண்டை ஊர் பஞ்சாயத்துவரை சென்றுள்ளது. இருவரும் சேர்ந்து வாழ முடியாது என்று திட்டவட்டமாக கூறியதால், பஞ்சாயத்து செய்தவர்கள் அவர்களை பிரித்து விட்டுள்ளனர். இதையடுத்து, கணவனை பிரிந்த லதா பக்கத்து ஊரில் தனியாக வசித்து வந்துள்ளார்.
அதேவேளையில், மூன்று குழந்தைகளும் சீதாராமராஜுவின் பராமரிப்பில் வளர்ந்துள்ளனர். மேலும், சீதாராமராஜு அதே ஊரைச் சேர்ந்த குமாரி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவர், தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முதல் மனைவி லதா, பொப்பில்லங்கா கிராமத்தில் உள்ள தன்னுடைய தாயார் லட்சுமியை பார்க்க வந்துள்ளார். அதை அறிந்து அங்கு சீதாராமராஜு தனது நண்பர்கள் இருவருடன் சென்றுள்ளார்.
கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை கோதாவரி நதியில் வீசிவிட்டு மூன்று பேரும் தலைமறைவாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்து விரைந்துவந்த ராஜமகேந்திரவரம் போலீசார், இருவரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சீதாராமராஜு உள்ளிட்ட மூன்று பேரை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஏற்கனவே 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரை கொலை செய்த வழக்கில், சீதாராமராஜு சிறைக்கு சென்றுவந்துள்ளார்.
இரண்டு முறை சிறை சென்றுவந்தவர், மனைவி மற்றும் மாமியாரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பதைபதைக்க வைத்துள்ளது.
மனைவி, மாமியார் வெட்டிக் கொலை… பிரிந்து சென்ற விரக்தியில் ஆத்திரம்… காதல் கணவன் வெறிச்செயல்…


