• Login
Wednesday, March 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஆக்டோபஸ் கரங்கள்: அமெரிக்காவின் உலக ஆதிக்கமும் அதன் கசப்பான விளைவுகளும் – ஒரு பார்வை!

GenevaTimes by GenevaTimes
March 3, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஆக்டோபஸ் கரங்கள்: அமெரிக்காவின் உலக ஆதிக்கமும் அதன் கசப்பான விளைவுகளும் – ஒரு பார்வை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்கா தன் ஆக்டோபஸ் கரங்களை நீட்டி அபகரிக்கிறது….’ இது நோபல் பரிசுப் பெற்ற கவிஞர் பாப்லோ நெருடாவின் 1950 ஆண்டு வெளியான “The United Fruit Co.” என்றப் புகழ்பெற்ற கவிதை நூலில் இடம்பெற்றிருக்கும் குறிப்பு.

ஈரானின் முகம்மது மொசாத்திக் முதல் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி வரை அமெரிக்காவின் நடவடிக்கையால் பலநாடுகள், தலைவர்கள் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கின்றன. அப்படி அமெரிக்காவின் ஆக்டோபஸ் கரங்களில் சிக்கி சின்னாபின்னமான நாடுகள் குறித்த தகவல்களையும், அதற்கான காரணங்களையும் அலசலாம்.

அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கைக்கு என்னக் காரணங்கள் என்பதை தெரிந்துகொள்ள, அமெரிக்காவின் தொடர் செயல்பாடுகளை மேலோட்டமாக பார்க்கலாமா…

அயதுல்லா கமேனி
அயதுல்லா கமேனி
டாலர் அரசியலின் தொடக்கம்

இரண்டாம் உலகப் போர் முடிவடையும் தருவாயில், உலகப் பொருளாதாரத்தைச் சீரமைக்க 44 நாடுகளின் பிரதிநிதிகள் அமெரிக்காவில் கூடினர். அப்போது உலகிலேயே அதிக அளவு தங்க இருப்பு வைத்திருந்த நாடு அமெரிக்கா.

அதனால், “அமெரிக்க டாலரின் மதிப்பு தங்கத்துடன் இணைக்கப்படும்” என அமெரிக்கா முடிவு செய்து அறிவித்தது. மற்ற நாடுகளும் தங்கள் கரன்சியின் மதிப்பை டாலருடன் இணைத்துக் கொண்டன. இதன் மூலம் உலகின் ‘Reserve Currency’ ஆக டாலர் மாறியது.

இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள் வெற்றியைத் தழுவின.

அதிகாரப்போட்டியின் ஆரம்பம்

அதற்குப்பின், ‘இனி உலகின் பவர் சென்டர் யார்?’ என குரலில்லா கேள்வி எழுந்தது. அப்போதுதான் அமெரிக்கா அணி – சோவியத் யூனியன் அணி – அணிசேரா நாடுகள் என உலகம் மூன்றாக பிரிந்தது.

இதில் அமெரிக்கா – சோவியத் யூனியன் நேரடியாக ஆயுதம் ஏந்திப் போரிடாமல், உளவுத்துறை, பொருளாதாரம், அரசியல் சித்தாந்த விமர்சனம் என பனிப்போரை நிகழ்த்திக்கொண்டன.

அணு ஆயுதத் தயாரிப்பு முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை எல்லாவற்றிலும் போட்டி நிலவியது. 1991-ல் சோவியத் யூனியன் உடைந்தப் பிறகு உலகின் பவர் சென்டராக அமெரிக்கா தன்னை முன்னிறுத்திக்கொண்டது.

அதற்கு தொடக்கப்புள்ளியாக அமைந்ததுதான் டாலர் அரசியல்.

சோவியத் – இரண்டாம் உலகப்போர்
அமெரிக்காவின் எண்ணெய் அரசியல்

1971-ல் அமெரிக்கா “இனி டாலரைத் தங்கமாக மாற்ற முடியாது” என்று அறிவித்து ஒரு அதிரடி முடிவை எடுத்தது. இதனால் டாலரின் மதிப்பு வீழ்ச்சியடையும் சூழல் உருவானது. இதைச் சமாளிக்க, 1974-ல் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான சவூதி அரேபியாவுடன், “சவூதி அரேபியா, தன் எண்ணெயை அமெரிக்க டாலருக்கு மட்டுமே விற்க வேண்டும். அதற்குப் பதிலாக, அமெரிக்கா சவூதி அரேபியாவுக்கு ராணுவப் பாதுகாப்பையும், நவீன ஆயுதங்களையும் வழங்கும்.” என்ற ரகசிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. எண்ணெய் உற்பத்தி செய்யும் அனைத்து நாடுகளும் அமெரிக்காவின் ‘டாலருக்கு எண்ணெய் விற்பனை’ என்ற முடிவுக்கு உடன்பட்டன.

அதனால், உலக நாடுகள் எண்ணெய் வாங்க தங்கள் கருவூலத்தில் டாலரைச் சேமிக்கத் தொடங்கின. இப்படித்தான் அமெரிக்க டாலர் உலகின் பொதுவான கரன்சியாக மாறியது. இது அமெரிக்காவிற்குத் தடையற்ற பொருளாதார பலத்தைக் கொடுத்தது.

ஆயுதமும் – பொருளாதார வளர்ச்சியும்

பனிப்போர் காலத்தில் ராணுவத் தேவைக்காக உருவாக்கப்பட்ட இணையதளம், GPS போன்ற தொழில்நுட்பங்கள், 1990-களுக்குப் பிறகு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தன. மைக்ரோசாப்ட், ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்கள் உலகச் சந்தையைக் கைப்பற்றின.

இரண்டாம் உலகப் போரில் தொடங்கிய ஆயுத உற்பத்தியால், அமெரிக்காவின் பொருளாதாரம் அதன் ராணுவ வலிமையோடும் பின்னிப் பிணைந்திருந்தது. அதனால்தான், அமெரிக்காவை புறக்கணிக்க நினைப்பவர்களுக்கு, அதன் ராணுவ வலிமையை எதிர்க்கும் ஆற்றலும் இருக்க வேண்டும்.

எனவே, அமெரிக்கா தனக்குக் கிடைத்த இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்தி, உலக நாடுகளின் விஷயங்களில் கட்டப்பஞ்சாயத்து மூலம் அரசியல் செய்யத் தொடங்கியது.

அமெரிக்கா
அமெரிக்கா
ஆயுத விற்பனை யுக்திகள்

`அமெரிக்கவில் உற்பத்திச் செய்யப்படும் ஆயுதங்களை விற்கவும், அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் தலைவர்களை இல்லாமல் ஆக்கவும் தலைவர்களுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களை அமெரிக்கா தூண்டி விடுகிறது. அல்கொய்தா, தாலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்களை வழங்கி ஊக்குவித்தது’ போன்றக் கொடூரமான குற்றச்சாட்டுகள் அமெரிக்கா மீது இருக்கின்றன.

இனி அமெரிக்காவுக்கு கட்டுப்படாதவர்கள் என்ன ஆனார்கள் என்பதுகுறித்து உலக வரலாறு நினைவு வைத்திருப்பதைப் பார்க்கலாமா?

1940-ல் இத்தாலி தேர்தலில் தலையீடு, 1949-1953-ல் அல்பேனியாவில் ஆட்சிக் கவிழ்ப்புக்கான முயற்சி, 1949-ல் சிரியாவில் ஆட்சிக் கவிழ்க்க உதவி என சிறியளவில் இருந்த அமெரிக்காவின் தலையீடு, முழுமையாகத் தொடங்கியது ஈரான் விஷயத்தில்தான்.

ஈரானின் எண்ணெய் கிணறு: சதிவலை

ஈரானின் எண்ணெய் வளத்தை சுரண்டி வந்த பிரிட்டனை எதிர்த்த முகமது மொசாத்திக், மக்கள் ஆதரவுடன் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து ‘ஈரானின் எண்ணெய் வளம் இந்த மண்ணின் மக்களுக்கே சொந்தம்’ என அதை நாட்டுடமையாக்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரிட்டன், அமெரிக்காவின் உதவியுடன் பொய் பிரசாரங்கள் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு நாடகத்தை அரங்கேற்றியது. பிரதமர் முகமது மொசத்திக் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, 1967-ல் உயிரிழந்தார். இந்தச் சதிச் செயலை 2013-ல் CIA அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்
நிலமும் அரசியலும்

லத்தீன் அமெரிக்க நாடான குவாத்தமாலாவின் ராணுவ அதிகாரியாக இருந்து, ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜாகோபோ ஆர்பென்ஸ் (Jacobo Arbenz), அமெரிக்காவின் United Fruit Company வசம் இருந்த பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை, ஏழை விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுத்தார். அதனால் ஆர்பென்ஸ் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு, நாடு கடத்தப்பட்டார். அவர் சென்ற பிறகு, அமெரிக்கா அமைத்த ராணுவ ஆட்சி குவாத்தமாலாவைச் சுடுகாடாக்கியது. சுமார் 40 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரில் 2,00,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஒரு கம்பெனியின் லாபத்திற்காக ஒரு ஒட்டுமொத்த தேசமே சிதைக்கப்பட்டது.

இந்த அநீதியைக் நேரில் கண்ட ஒரு இளைஞன்தான், பின்னாளில் புரட்சியாளராக மாறிய ‘சே குவேரா’ என்பது வரலாறு நமக்குச் சொல்லும் சுவாரசியமான உண்மை.

வைரமும் யுரேனியமும்: காங்கோ

1961-ல் ‘காங்கோ நாட்டின் தங்கம், வைரம், குறிப்பாக அணு ஆயுதத் தயாரிப்பிற்குத் தேவையான யுரேனியம் இந்த நாட்டு மக்களுக்கே சொந்தம்’ என சட்டமியற்றினார், காங்கோவின் முதல் பிரதமர் பாட்ரிஸ் லுமும்பா. அதனால், அமெரிக்க அதிபர் ஐசனோவர் உத்தரவின் பேரில், உள்ளூர் கிளர்ச்சி மூலம் லுமும்பா பதவியிறக்கப்பட்டு, பெல்ஜியம் அதிகாரிகளின் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். லுமும்பாவின் வீழ்ச்சிக்கு பின் காங்கோ சுமார் 30 ஆண்டுகள் அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரியின் பிடியில் சிக்கிச் சீரழிந்தது. காங்கோ இன்றும் அமைதியின்மையில் இருக்கிறது.

சால்வடார் அல்லெண்டே
சால்வடார் அல்லெண்டே
நெருக்கமானவர்களாக இருந்தாலும்…

இதேப்போல தாமிரச் சுரங்கங்களை தேசியமயமாக்கிய சிலி நாட்டின் ஆட்சியாளர் சால்வடார் அல்லெண்டே, அமெரிக்காவின் சதித் திட்டத்தால் கொல்லப்பட்டார்.

அமெரிக்காவின் உளவாளியான மானுவேல் நோரியேகா காலச் சூழலால் பனாமாவின் ஜனாதிபதியானார். அதைத் தொடர்ந்து அமெரிக்கா வசம் இருந்த பனாமா கால்வாயை மீட்க முயற்சிகளை மேற்கொண்டார். அதற்காகவே, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜார்ஜ் புஷ் அவரைக் கைது செய்து, 40 ஆண்டுகள் சிறையில் அடைத்தார்.

அமெரிக்காவிற்கு நீங்கள் எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், அதன் நலன்களுக்கு நீங்கள் குறுக்கே நின்றால், ஒரே இரவில் நீங்கள் ‘சர்வாதிகாரியாக’ மாற்றப்பட்டு வேட்டையாடப்படுவீர்கள் என்ற உண்மையை நோரியேகாவின் வீழ்ச்சி உலகுக்கு சொன்னது.

ஈராக்கில் அணு ஆயுதங்கள் இல்லை என்பது அமெரிக்காவிற்கு முன்னரே தெரியும்.
ஈராக்கும் சதாமும்

ஈராக்கின் எண்ணெயை அமெரிக்க டாலருக்குப் பதில் ‘யூரோ‘ கரன்சியில் விற்பனை செய்யப்போவதாக அறிவித்த, ஈராக்கின் அதிபர் சதாம் உசேன் `அணு ஆயுதம் வைத்திருந்தார்’ என்றக் குற்றச்சாட்டில் கொல்லப்பட்டார். அதற்குப்பிறகு, அமெரிக்கா தேடிய அந்த ‘அணு ஆயுதங்கள்’ ஈராக்கில் எங்குமே கண்டுபிடிக்கப்படவில்லை. ‘ஈராக்கில் அணு ஆயுதங்கள் இல்லை என்பது அமெரிக்காவிற்கு முன்னரே தெரியும்’ என்று பின்னாளில் பல உளவுத்துறை அறிக்கைகள் ஒப்புக்கொண்டன. ஆனால், அதற்குள் ஒரு நாடு சிதைக்கப்பட்டு, சதாம் வீழ்த்தப்பட்டு, டாலரின் ஆதிக்கம் அங்கே நிலைநாட்டப்பட்டுவிட்டது.

சதாம் உசேன்
சதாம் உசேன்
கடாபிக்கு நேர்ந்த துயரம்

சுமார் 42 ஆண்டுகள் லிபியாவைத் தனது இரும்புப்பிடியில் வைத்திருந்தவர் முஅம்மர் கடாபி (Muammar Gaddafi). ஆப்பிரிக்க நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து, அமெரிக்க டாலருக்குப் பதில் ‘தங்க நாணயங்களை’ (Gold Dinar) அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவான கரன்சியை உருவாக்கி, அதன் மூலம் தங்களின் எண்ணெயை விற்க வேண்டும் என்று திட்டமிட்டார். இது அமெரிக்க டாலரின் மரணத்திற்குச் சமமானது. அதனால் உள்நாட்டுக் கிளர்ச்சியை சாதகமாக்கிக்கொண்ட அமெரிக்கா, லிபியாவில் நுழைந்து, முஅம்மர் கடாபியைக் கொடூரமாகக் கொன்றது.

நீளும் பட்டியல்

இந்தப் பட்டியல் வியாட்னாமின் நோ டின் டியெம், கியூபாவின் சே குவேரா, டொமினிக்கன் குடியரசு நாட்டின் பேல் ட்ருஜிலோ, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ என நீண்டுகொண்டே போகிறது. அதன் தொடராகதான், எண்ணெய் வளமிக்க ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு, ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது, நீண்ட தூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்குகிறது, ஈரான் மக்களுக்கு எதிரான ஆட்சியை மாற்ற வேண்டும் எனக் காரணங்களை அடுக்கினாலும், எண்ணெய் வளம்தான் குறி எனவும், அதற்கு ஆதரவளிக்கும் ஆட்சியாளர்களை அங்கு அமர்த்துவதுதான் நோக்கம் எனவும் சர்வதேச அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அயதுல்லா கமேனி
அயதுல்லா கமேனி

இது தவிர, உலக நாடுகளின் பிரிக்ஸ் குழுவில் டாலருக்கு மாற்றான பிரிக்ஸ் பணம் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதில் முழுநேர உறுப்பினராக ஈரான் செயல்படுகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. எனவே, அதற்கான இறுதி முடிவுதான் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான அமெரிக்காவின் நடவடிக்கை என அரசியல் விமர்சகர்கள் காட்டமான விமர்சனத்தையும் முன்வைக்கின்றனர்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இத்துடன் முடிவடையப்போவதில்லை. இது தொடரும் என்பதிலும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், இதுபோன்ற தொடர்நடவடிக்கைகள் உலக நாடுகளின் இறையாண்மைக்கு பெரும் சவாலாக இருக்கிறது என்பது ஏன் கவனிக்கப்படுவதில்லை என்பதுதான் ந்மக்கு எழும் கேள்வி..!

என்று தெளியுமோ… தணியுமோ இந்த அதிகார போதை?

Read More

Previous Post

Petrol-Diesel | "போர் பதற்றத்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாது" – மத்திய அரசு அதிகாரிகள் தகவல்!

Next Post

“குர்ஆனை அவமதித்ததும், அவதூறான உள்ளடக்கத்தை வெளியிட்டதும் குறித்த குற்றச்சாட்டில் மாணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.” – Malaysiakini

Next Post

“குர்ஆனை அவமதித்ததும், அவதூறான உள்ளடக்கத்தை வெளியிட்டதும் குறித்த குற்றச்சாட்டில் மாணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.” – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin