கோலாலம்பூர் | மார்ச் 03, 2026:
இந்தோனேசியா, கம்போடியா மற்றும் வியட்நாம் போன்ற ஆசியான் (ASEAN) நாடுகள் ‘பாலஸ்தீனத்திற்கான அமைதி வாரியத்தில்’ (Board of Peace for Palestine) இணைந்துள்ள போதிலும், மலேசியா தற்போதைக்கு இதில் பங்கேற்கப் போவதில்லை என்ற தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் சர்வதேச சட்ட மீறல்களை இந்த வாரியம் எந்தளவுக்குத் தீவிரமாகக் கையாளும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, காசாவின் மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு உலக நாடுகள் ஆர்வம் காட்டினாலும், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலின் உண்மையான வேர்களை அகற்றுவதில் இந்த வாரியம் அதிக கவனம் செலுத்தவில்லை என மலேசியா கருதுகிறது என்று, வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார்.
பாலஸ்தீனத்தில் நீடித்த அமைதி ஏற்பட வேண்டுமானால், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் மற்றும் ‘இரு நாடு தீர்வு’ (Two-state solution) முறை சர்வதேச சட்டங்களின்படி அமல்படுத்தப்பட வேண்டும்.
மற்ற ஆசியான் நாடுகள் இதில் பங்கேற்பது குறித்துக் கருத்து தெரிவித்த அமைச்சர், “ஒவ்வொரு நாட்டின் இறையாண்மை மற்றும் அவர்களின் முடிவுகளை மலேசியா மதிக்கிறது. ஆனால் மலேசியாவைப் பொறுத்தவரை ஐக்கிய நாடுகள் சபை (UN) போன்ற அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தளங்கள் மூலமே அமைதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது,” என்றார்.
மலேசியா எப்போதும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆசியான் நாடுகளுடனான பிராந்திய ஒத்துழைப்பிற்கு முன்னுரிமை அளிக்கும். அதே வேளையில், பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து சர்வதேச அரங்கில் குரல் கொடுக்கும் என்றும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.




