Last Updated:
கமேனி கொல்லப்பட்ட நிலையில், இடைக்கால உச்சபட்ச தலைவராக அயதுல்லா அலி ரேசா அராஃபி நியமிக்கப்பட்டார். 88 மதகுருமர்கள் புதிய தலைவரை தேர்வு செய்ய உள்ளனர்.
ஈரானின் உச்சபட்சத் தலைவர் கமேனி கொல்லப்பட்ட நிலையில், இடைக்கால உச்சபட்சத் தலைவராக அயதுல்லா அலி ரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரானில் உச்சபட்ச தலைவரின் கட்டுப்பாட்டிலேயே நாடும், சக்திவாய்ந்த ஐஆர்ஜிசி எனப்படும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையும் இருந்து வருகின்றன. 1989 ஆம் ஆண்டு முதல் உச்சபட்ச தலைவராக இருந்து வந்த 86 வயது கமேனி தற்போது கொல்லப்பட்ட நிலையில் அடுத்த உச்ச பட்ச தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பொதுவாக, உச்சபட்சத் தலைவர் பதவியை தேர்ந்தெடுக்கும் முறை ரகசியமானதாகும். 88 ஷியா மதகுருமார்கள் அடங்கிய வல்லுநர் பேரவையே புதிய உச்ச பட்சத் தலைவரை தேர்வு செய்ய வேண்டும். அடுத்த உச்ச பட்சத் தலைவராக கமேனியின் மகன் முஜ்தபா கமேனி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அயதுல்லா அலி ரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளார்.
67 வயதான மூத்த மதகுருவான அலி ரேசா, கமேனியின் நம்பிக்கையைப் பெற்று அரசாங்கத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். மதகுருக்களுக்குப் பயிற்சி அளிக்கும் பல்கலைக்கழகத்தின் தலைவராகவும், கார்டியன் கவுன்சில் எனும் அரசமைப்பு சட்டக் குழுவிலும் இடம்பெற்றவர் அலிரேசா. கமேனியை போலவே, அடிப்படைவாதக் கொள்கைகளை கடைப்பிடித்து வருபவர் அலிரேசா. அதனால் அடுத்த உச்சபட்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

