கோலாலம்பூர் | மார்ச் 01, 2026:
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பாஸ் (PAS) கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே ஏற்க வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு நீலாயில் நடைபெற்ற ‘ரஹ்மட் ரமலான்’ நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முஹிடின், தற்போது எதிர்க்கட்சிக் கூட்டணியில் பாஸ் (PAS) கட்சியே அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற இடங்களைக் கொண்டுள்ளது. எனவே, அந்தப் பதவி அக்கட்சிக்கே வழங்கப்பட வேண்டும் என்றார்.
இதுவரை எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் பெர்சத்து (Bersatu) கட்சியில் இருந்தும், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். எனவே, அவர் தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிப்பது முறையல்ல.
கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற்ற PN உச்சமன்றக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு, பாஸ் கட்சியே அடுத்த தலைவரை முன்மொழிய வேண்டும் என ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
பாஸ் கட்சி தனது வேட்பாளரை அடையாளம் கண்டவுடன், அது குறித்து நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ டாக்டர் ஜொஹாரி அப்துலுக்கு அதிகாரப்பூர்வமாகக் கடிதம் அனுப்பப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் தகுந்த பெயரை பாஸ் தலைமைத்துவம் அறிவிக்கும் என எதிர்பார்ப்பதாக முஹிடின் தெரிவித்தார்.
முன்னதாக, ஹம்சா சைனுடினின் பதவி தற்போதைக்குத் தொடரும் என PN தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், முஹிடினின் தற்போதைய அறிக்கை எதிர்க்கட்சித் தலைவர் மாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளது.




