நாம் அனைவரும் ஒற்றுமை குறித்து பேசுகிறோம். ஆனால் அதனை செயல்படுத்துகிறோமா என்றால் அது கேள்விக்குறியே என்கிறார் பெட்டாலிங் எஸ்டேட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தலைவர் டான்ஶ்ரீ ஹரி நாராயாணன் கோவிந்தசாமி தெரிவித்தார். தற்பொழுது நம்மிடையே அதிகமாக பேசப்படுவது கோவில் பிரச்சினையைதான்.
இந்த கோவில் பிரச்சினையை நாம் இரண்டு வகையாக பிரிக்க வேண்டும். முதல் வகை ஆங்கிலேயர் காலம் தொட்டு நம் நாட்டில் இயங்கி வரும் கோவில்கள். ஆங்கிலேயர்கள் காலத்தில் கோவில், பள்ளிக்கூடம், இடுகாடு என அந்தந்த தோட்டத்தில் அமைத்து கொடுத்தனர். அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிய 69 ஆண்டுகள் பல தோட்டங்கள் நகர்புறங்களாக மேம்பாடு கண்டுள்ளது.
நகர்புறங்களாக மேம்பாடு காண தோட்டங்களை தனியார் நிறுவனங்களோ அல்லது அரசு தொடர்புடைய நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு அது மேம்பாடு காணும்போது பிரச்சினை எழுகிறது. ஒரு சில மேம்பாட்டு நிறுவனங்கள் தோட்ட மக்களுடன் கலந்தாலோசித்து சுமுகமாக தீர்வு கண்டு வருகின்றனர். சில மேம்பாட்டாளர்கள் தோட்ட மக்கள் கேட்கும் இடத்தை வழங்காதபோது பிரச்சினை எழுகிறது. இது காலம் காலமாக நடந்து வருவதுதான்.
இது போன்ற பிரச்சினைகள் அன்றைய கால கட்டத்தில் எழும்போது துன் சம்பந்தன், துன் சாமிவேலு போன்ற தலைவர்கள் இரு தரப்பினரையும் அழைத்து பேசி அதனை சுமுகமாக தீர்த்து வைப்பர். அதற்கு உதாரணம் நம்முடைய இந்த ஆலயமும் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர், கிருஷ்ணர், முனீஸ்வர ஆலயங்களை சொல்லலாம்.
துன் சம்பந்தன் காலகட்டத்தில் பெட்டாலிங் எஸ்டேட் மேம்பாடு கண்டபோது மேம்பாட்டாளர்களிடம் பேசி 6 கடைக்கான இடங்களை பெட்டாலிங் எஸ்டேட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு பெற்று தந்தார். அதே போல் துன் சாமிவேலு காலத்தில் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் ரயில் பாதை அமைக்க கோவில் இருந்த இடத்தை அகற்ற வேண்டியிருந்த போது தெனாகா நேஷனலுக்கு சொந்தமான இடத்தை பேசி பெற்று தந்து தற்போது அந்த வட்டாரத்தில் மூன்று ஆலயங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இது போல இன்னும் பல ஆதாரங்கள் இருக்கின்றன.
அதனால் மிக பழைமையான ஆலயங்கள் குறித்து அரசாங்கம் நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்பதோடு ஒரு ஆலயம் சங்க உறுப்பினர்கள் (கமிட்டி)யும் அதிக பக்தர்களுக்கும் வருகின்றனர் என்றால் அது போன்ற ஆலயங்கள் குறித்தும் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று டான்ஶ்ரீ ஹரிநாராயணன் வேண்டுகோள் விடுத்தார்.
இரண்டாவது வகை அரசாங்க இடத்தில் அவர்களின் அனுமதி இல்லாமலும் அதே வேளை சொந்த விருப்பத்திற்கேற்ப ஆலயங்களை அமைத்து கொள்வது. இது தவறு நமக்கே தெரியும்போது அரசாங்கத்தை இதில் குறை கூற முடியாது. நம் மீது தவறு இல்லாத பட்சத்தில் எவ்வாறு நமது உரிமைக்காக குரல் கொடுக்கிறோமோ அதேபோல் தவறு என்றால் அதனை ஒப்புக் கொள்ளும் மன பக்குவம் அவசியம் என்றார் அவர்.
இதற்கிடையில் கோவிலில் மனித மற்றும் இயற்கை மேம்பாட்டு சங்கம் (கைகள்) சிலாங்கூர் இயக்கத்தின் ஏற்பாட்டில் அரிசி, காய்கறிகள் ஆகியவை இனம், மதம் பாராமல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இது குறித்து இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கண்ணன் ராமன் பேசுகையில் இயக்கத்தின் ஏற்பாட்டில் அடிக்கடி இதுபோன்ற உதவிகள் குறிப்பாக வசதி குறைந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.






