Last Updated:
5 நாட்கள் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியின் ஒவ்வொரு நாளிலும் ஜம்மு காஷ்மீர் அணியே ஆதிக்கம் செலுத்தியது
ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணி ரஞ்சி கோப்பையில்முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த மகத்தான வெற்றியைப் பாராட்டி அம்மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா சிறப்பு பரிசுகளை அறிவித்துள்ளார்.
கர்நாடகாவின் ஹூப்பள்ளியில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், பலம் வாய்ந்த கர்நாடகா அணியை வீழ்த்தி ஜம்மு காஷ்மீர் அணி தனது முதல் ரஞ்சி கோப்பை மகுடத்தைச் சூடியது. இந்த வெற்றியை நேரில் கண்டு ரசிக்க முதல்வர் ஓமர் அப்துல்லா ஹூப்பள்ளிக்குச் சென்றிருந்தார்.
வெற்றி பெற்ற ஜம்மு காஷ்மீர் அணிக்கும் அதன் பணியாளர்களுக்கும் சேர்த்து ரூ. 2 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்றும், இந்த வெற்றி ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
ரொக்கப் பரிசு மட்டுமின்றி அணியின் வீரர்களுக்கு மற்றுமொரு இன்ப அதிர்ச்சியையும் முதல்வர் அளித்துள்ளார். மாநில அரசின் புதிய விதிகளின்படி, விளையாட்டில் மிகச்சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு வழங்கப்படக் கூடிய அரசு வேலை வாய்ப்புகளும் இந்த ரஞ்சி கோப்பை நாயகர்களுக்கு வழங்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.


