நியூஸ் 18 குழுமத்தின் Rising Bharat உச்சிமாநாடு நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஏ.ஐ. மாநாட்டில் இளைஞர் காங்கிரசார் சட்டையை கழற்றி போராட்டம் நடத்தியதை கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், திமுக அரசையும் விமர்சித்தார். மேற்கு வங்கத்திலும் ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக நியூஸ் 18 குழுமத்தின் Rising Bharat உச்சிமாநாடு நிகழ்ச்சியில் பேசிய மோடியின் முழு உரை: “நெட்வொர்க் 18-ல் பணியாற்றும் அனைத்து பத்திரிகையாளர்களே, நிகழ்ச்சி மேற்பார்வையாளர்களே, இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்துள்ள சிறப்பு விருந்தினர்களே, பெண்களே, தாய்மார்களே! நீங்கள் அனைவரும் இந்தியாவின் எழுச்சி குறித்து விவாதிக்கிறீர்கள். ‘தத் த்வம் அசி’ அதாவது, பிரமத்தில் நாம் தேடுவது நமக்குள்ளேயே இருக்கிறது என நமது வேதங்கள் கூறுகின்றன. நமக்குள் வலிமை இருக்கிறது. முதலில் நாம் அதை அங்கீகரிக்க வேண்டும். கடந்த 11 ஆண்டுகளில், இந்தியா அந்த வலிமையை அங்கீகரித்துள்ளது. இன்று நாடு அதை அதிகாரம் செய்ய தொடர்ந்து பாடுபடுகிறது.
ஒரு தேசத்தில் வலிமை திடீரென வெளிப்படுவதில்லை; அது தலைமுறை தலைமுறையாகக் கட்டமைக்கப்படுகிறது. அது அறிவு, பாரம்பரியம், கடின உழைப்பு மற்றும் அனுபவம் மூலம் உருவாக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகால அடிமைத்தனத்தின் மூலம், வலிமை என்ற உணர்வே தாழ்வு மனப்பான்மையால் நிரம்பிவிட்டது. வெளியிலிருந்து வந்த சித்தாந்தங்கள் நாம் கல்வி அறிவற்றவர்கள், வெறுமனே அனைத்தையும் பின்பற்றுபவர்கள் என்ற நம்பிக்கையை சமூகத்தில் ஆழமாகப் பதித்துவிட்டன.
நம் வேதங்களில், ‘யாத்ரிஷி பாவனா யஸ்ய, சித்தர் பவதி தத்ரிஷி’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, நம் நம்பிக்கை தாழ்ந்து இருக்கும்போது, சாதனைகளும் மட்டுப்படும். வெளிநாட்டு தொழில்நுட்பங்களை காப்பி அடிப்பது, வெளிநாட்டு ஒப்புதலுக்காக காத்திருப்பது, அரசியல் அல்லது புவியியல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் நம்மை அடிமைப்படுத்திவிடும். துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரத்திற்குப் பிறகும், இந்தியாவால் இந்த அடிமைத்தன மனநிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. அதற்கான விலையை நாம் இன்னும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
வர்த்தக ஒப்பந்தங்களில் மாற்றங்களை காணலாம். வளர்ந்த நாடுகள் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள ஆர்வம் காட்டுவது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இதற்கான பதில் இந்தியாவின் நம்பிக்கையில் உள்ளது. கடந்த 11 ஆண்டுகளில், நாட்டில் புதிய ஆற்றல் பாய்ந்துள்ளது. இழந்த வலிமையை மீண்டும் பெற இந்தியா இப்போது பாடுபடுகிறது.

மேக் இன் இந்தியாவை வலியுறுத்தினோம், வங்கி முறையை வலுப்படுத்தினோம், இரட்டை இலக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தினோம், இந்தியாவை உலகின் வளர்ச்சி இயந்திரமாக மாற்றினோம். இந்தியாவின் இந்த பலம்தான் வளர்ந்த நாடுகளே நம்முடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்ய முன்வர முக்கியமான காரணங்கள்.
ஒரு காலத்தில் இந்தியா புதிய தொழில்நுட்பங்களை மட்டுமே பயன்படுத்தும் நாடாக இருந்தது. இன்று, இந்தியா புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் நாடாகவும், புதிய தரங்களை நிர்ணயித்தும் வருகிறது. நமது சொந்த பலத்தை நாம் உணர்ந்ததால் இது நடந்துள்ளது. நாம் பெருமையுடன் முன்னேறும்போது, உலகம் நம்மை பார்க்கும் விதமும் மாறுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவை உலக ஊடகங்கள் குறைவாக மதிப்பிட்டன. இந்தியாவின் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இன்று இந்தியாவின் ஒவ்வொரு செயல்பாடுகளும் உலக அளவில் பேசப்படுகின்றன. அண்மையில் நடந்த ஏஐ உச்சி மாநாடு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

