இந்தத் தீர்ப்பு குறித்து பாதிக்கப்பட்ட நடிகை முன்னதாக சமூக ஊடகங்களில் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருந்தார். நடிகர் திலீப் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பலரும் தங்களின் கண்டங்களை தெரிவித்து வந்தனர். மாவட்ட நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. கேரள ஐகோர்ட்டில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்படும் என சிறப்பு அரசு வழக்கறிஞர் வி.அஜய் குமார் கூறியிருந்தார்.
இந்த நிலையில், திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு ஐகோர்ட்டில் இன்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், இவ்வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிகப்பட்டுள்ள 6 பேருக்கும் கடுந்தண்டனை விதிக்கவும் கோரப்பட்டுள்ளது.
திலீப் மட்டுமில்லாது, இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சார்லி தாமஸ், சனில் குமார் மற்றும் சரத் ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்களது விடுதலையையும் எதிர்த்து தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மேல்முறையீட்டு மனுவில் கோரப்பட்டுள்ளது.
