நியூஸ்18 சார்பில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து பல்வேறு துறை வல்லுநர்கள் விவாதிக்கும் ‘ரைசிங் பாரத் மாநாடு 2026’-ல் கலந்துகொண்ட பிரதமர் மோடி, இந்தியாவை உலகின் வளர்ச்சி இயந்திரமாக மாற்றியுள்ளதாக தெரிவித்தார்.
இந்தியாவுக்கென உலகளாவிய அடையாளம் உருவாகி வரும் நிலையில், ‘வலிமை உள்ளிருந்து’ (Strength Within) எனும் கருப்பொருளில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து பல்வேறு துறை வல்லுநர்கள் விவாதிக்கும் ‘ரைசிங் பாரத் மாநாடு 2026’ நியூஸ்18 சார்பில் டெல்லியில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சர்வதேச அளவில் நாட்டின் உயர்ந்து வரும் அந்தஸ்து குறித்து பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடி பேசுகையில், “கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் உள்மன வலிமை விழித்தெழுந்துள்ளது. முன்பை விட இப்போது நாடு அதிக தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறது. இந்தியாவை உலகின் “வளர்ச்சி இயந்திரமாக” மாற்றியுள்ளோம். முன்பு பணவீக்கம் மிக அதிகமாக இருந்தது. இப்போது அதை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளோம். நமது பொருளாதாரமும் இப்போது மிகவும் வலிமையாக உள்ளது.
முன்பெல்லாம் நாம் மற்ற நாடுகளைத் தேடிச் செல்வோம். ஆனால், இப்போது உலகின் பெரிய நாடுகளே இந்தியாவுடன் வியாபாரம் செய்யத் தாமாக முன்வருகின்றன. இதற்கு இந்தியாவின் “தன்னம்பிக்கை” தான் முக்கியக் காரணம்.
சுதந்திரம் கிடைத்த பிறகும் நீண்ட காலம் நாம் பழைய அடிமைத்தன சிந்தனையிலேயே இருந்தோம். மற்ற நாட்டுத் தொழில்நுட்பங்களை அப்படியே காப்பி அடித்துக் கொண்டிருந்தோம். ஆனால், இப்போது அந்த நிலை மாறி, நமது சொந்தத் திறமையை நாம் அடையாளம் கண்டு வருகிறோம்.” என்று கூறினார்.
