Last Updated:
ஆந்திராவில் சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் துணை தாசில்தாரரின் கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்த பெண் துணை தாசில்தாரின் கணவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். பெண்ணின் சகோதரர்கள் ஆணவக் கொலை செய்த சம்பவத்தில் நடந்தது என்ன?
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ராயவரம் மண்டல துணை தாசில்தார் சந்தியா. அதே பகுதியில் உள்ள வேம்பள்ளி நகரில் ஜவுளிக் கடை நடத்தி வருபவர் சூரிய பிரகாஷ் ராவ். துணை தாசில்தார் சந்தியா, சூரிய பிரகாஷ் ராவ் ஆகிய இருவரும் ஒன்றாக படித்தவர்கள். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரின் காதல் விவகாரம் அறிந்த சந்தியா குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் வியாழனன்று அன்னவரத்தில் உள்ள ஒரு கோயிலில் சூரிய பிரகாஷ் – சந்தியா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு இருவரும் வேம்பள்ளி நகரில் உள்ள சூரிய பிரகாஷின் வீட்டிற்கு சென்றனர்.
தங்களுடைய சகோதரி வேறு சாதி இளைஞரை திருமணம் செய்துகொண்டதை சந்தியாவின் சகோதரர்கள் சந்திரப்பா மற்றும் கிரிபாபு ஆகியோரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடும் ஆத்திரத்தில் இருந்த இருவரும் வியாழனன்று இரவில் சூர்ய பிரகாஷின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
வீட்டிற்குள் இருந்த சூர்ய பிரகாஷை வெளியில் இழுத்துவந்து கற்கள் மற்றும் கட்டைகளால் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். பின்னர் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.
ஆனால், அங்கிருந்த ஊர் மக்கள் இருவரையும் பிடித்து, அவர்களை போலீசை வரவழைத்து ஒப்படைத்தனர். இந்த கொலை விவகாரத்தில் தொடர்புடைய அவர்களின் நண்பர் தப்பி ஓடிவிட்டார். சூரிய பிரகாஷ்ராவ் உடலை மீட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் துணை தாசில்தாருக்கே இந்த நிலை ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காலையில் திருமணம்… மாலையில் கொலை… பெண்ணின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொலைகாரர்களாக மாறிய சகோதரர்கள்…


