அலோர் ஸ்டார், பிப்ரவரி 25, 2026 –
அலோர் ஸ்டார், குபாங் ரோட்டான் (Kubang Rotan) பகுதியில் உள்ள ஒரு கடைத்தொகுதி நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் சிக்கி உருக்குலைந்தது.
கம்போங் ஹிலிரில் (Kampung Hilir) அமைந்துள்ள இரண்டு மாடி ‘கிளாஸ் பி’ (Class B) ரகக் கடைத்தொகுதியே இந்த விபத்திற்குள்ளானது. அதிகாலை 12:28 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தகவல் வழங்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, கட்டிடம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.
கெடா மாநில தீயணைப்புத் துறையின் மண்டலத் தலைவர் அமாட் அமினுடின் அப்துல் ரஹீம் கூறுகையில், தீயணைப்பு வாகனங்களில் இருந்த தண்ணீர் மற்றும் கூடுதல் தண்ணீர் டேங்கர் லாரிகளின் உதவியுடன் தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதிகாலை 1:06 மணியளவில் தீ ஓரளவிற்குத் தணிக்கப்பட்டது” என்றார்.
மீண்டும் தீப்பொறிகள் கிளம்பாமல் இருப்பதை உறுதி செய்ய ‘ஓவர்ஹால்’ (Overhaul) பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதிகாலை 4:46 மணியளவில் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்தன.
இந்த சம்பவத்தில் கடைத்தொகுதிக் கட்டிடத்தின் சுமார் 80 சதவீதம் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
விபத்து நடந்த நேரத்தில் கட்டிடத்திற்குள் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை.
தீ விபத்திற்கான துல்லியமான காரணம் மற்றும் ஏற்பட்ட சொத்து இழப்புகளின் மதிப்பு குறித்து தீயணைப்புத் துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




