சிரம்பான், பிப் 23:
செனவாங் பகுதியில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில், 64 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தனது சொந்த வாகனமே அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்று காலை சுமார் 9:30 மணியளவில், செனவாங் 2 (Jalan Persiaran Senawang 2) பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.
உயிரிழந்த முதியவர் தனது பல்நோக்கு வாகனத்தை (MPV) ஓரத்தில் நிறுத்திவிட்டு, அதன் முன்னே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பெரோடுவா விவா (Perodua Viva) கார் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முதியவரின் MPV வாகனத்தின் பின் பகுதியில் பலமாக மோதியது.
மோதிய வேகத்தில் அந்த MPV வாகனம் தானாக முன்னோக்கி நகர்ந்து, அதன் முன்னே நின்று கொண்டிருந்த உரிமையாளர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று,
மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் அசாஹர் அப்துல் ரஹீம் கூறினார்.
முதியவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ரெம்பாவ் (Rembau) மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய விவா கார் ஓட்டுநர் பலத்த காயமடைந்து துவாங்கு ஜாஃபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து தகவல் தெரிந்தவர்கள் 06-6032222 என்ற எண்ணில் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் நோர் ஃபட்சிலாவைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த வழக்கு 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.




