2024- ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது “ப்ரீ-சீடிங்” (Pre-seeding) முறை. இந்த “ப்ரீ-சீடிங்” முறையில், குருப் ஒன்றில் இந்தியா, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா அணிகள் இருக்கும் என ஐசிசி நிர்ணயித்தது. குரூப் இரண்டில் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் இடம் பெறும் என நிர்ணயிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா, லீக் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டதால், அந்த இடத்தைப் ஜிம்பாப்வே எடுத்துக்கொண்டது. இப்போது ஜிம்பாப்வே குரூப் 1-ல் விளையாடுகிறது. பொதுவாக லீக் சுற்றில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிகள் சரிசமமாகப் பிரிக்கப்பட வேண்டும்.
ஆனால், இந்த ப்ரீ-சீடிங் முறையினால், லீக் சுற்றில் சிறப்பாக விளையாடி முதலிடம் பிடித்த 4 அணிகளான இந்தியா, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா ஆகியவை குரூப் 1-ல் சேர்ந்துவிட்டன. அதேபோல், லீக் சுற்றில் இரண்டாம் இடம் பிடித்த அணிகள் அனைத்தும் குரூப் 2-ல் உள்ளன.
ஒரு அணி தனது லீக் சுற்றில் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தாலும், அவர்களுக்கு எந்த கூடுதல் சலுகையும் இல்லை. இதன் விளைவாக, சிறப்பாக விளையாடிய நான்கு அணிகளில் இரண்டு அணிகள் இப்போதே வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுவே ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கேப்டன் சூர்யகுமார் இந்த முறையை வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார். லீக் சுற்றில் 4 போட்டிகளிலும் வென்று முதலிடம் பிடித்தும், மீண்டும் வலுவான அணிகளுடன் மோத வேண்டியிருப்பது நியாயமற்றது என்பது சூர்யகுமார் கருத்தாக உள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கும் இந்தத் தொடரில், ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்யவும், அணிகள் பயணங்களைத் திட்டமிடவும் வசதியாகவே இந்த ப்ரீ-சீடிங் முறை கொண்டு வரப்பட்டதாக ஐசிசி விளக்கம் அளித்துள்ளது. ஒரு அணி வெற்றி பெற்றால் அடுத்த போட்டி எங்கு நடக்கும் என்று முன்கூட்டியே தெரிந்தால்தான் ஏற்பாடுகளைச் சரியாகச் செய்ய முடியும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.
ப்ரீ-சீடிங் (Pre-seeding) முறை வணிக ரீதியாக வசதியாக இருந்தாலும், விளையாட்டின் சுவாரஸ்யத்தையும், சிறப்பாக விளையாடும் அணிகளுக்கான அங்கீகாரத்தையும் குறைப்பதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

