Last Updated:
மிகக் குறைந்த அளவாக லட்சத்தீவில் 206 பேரும் இந்தத் திருத்த நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டுள்ளனர்.
9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் நோக்கில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்தத் திருத்தத்தின் முக்கிய நோக்கம், தகுதியற்ற வாக்காளர்களைப் பட்டியலிலிருந்து நீக்கி, தேர்தலுக்கான துல்லியமான தரவுகளை உறுதி செய்வதாகும். இதில் குறிப்பாக, மரணமடைந்தவர்கள், நிரந்தரமாக வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்தவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களின் பெயர்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.
புதிய வாக்காளர் சேர்க்கைக்கான ‘படிவம் 6’ மூலம் வந்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்ட பிறகும், பல மாநிலங்களில் நிகர வாக்காளர் எண்ணிக்கை லட்சக்கணக்கில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கையில் அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் 68,12,711 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர், இது அந்த மாநிலத்தின் தொடக்க வாக்காளர் எண்ணிக்கையில் 13.40% குறைப்பைக் காட்டுகிறது.
மத்தியப் பிரதேசத்தில் 34,25,078 வாக்காளர்களும், ராஜஸ்தானில் (அந்தா தொகுதி நீங்கலாக) 31,36,286 வாக்காளர்களும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் 24,99,823 வாக்காளர்கள் (11.77%) நீக்கப்பட்டுள்ள நிலையில், சதவீத அடிப்படையில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மிக அதிகபட்சமாக 16.87% (52,364 பேர்) வாக்காளர்கள் குறைக்கப்பட்டுள்ளனர்.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, கேரளாவில் 8,97,211 வாக்காளர்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 77,367 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர். கோவாவில் 1.27 லட்சம் பேரும், மிகக் குறைந்த அளவாக லட்சத்தீவில் 206 பேரும் இந்தத் திருத்த நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டுள்ளனர்.
Feb 21, 2026 10:00 PM IST


