Last Updated:
அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பால், இந்தியாவிற்கு வரி 10 ஆக குறைந்தது; Walmart, Gap, Target இந்தியாவிலிருந்து அதிக ஆர்டர் அளிக்க, காஞ்சிபுரம் பட்டு, பனாரஸ் துணிகள் அமெரிக்க சந்தையில் மவுசு பெறும்.
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால், இந்தியாவிற்கு வரி சதவிகிதம் 10 ஆக குறைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு இந்தியப் பொருட்கள் மீது 50% வரை மிக உயர்ந்த வரிகளை விதித்திருந்தார். இதில் அடிப்படை வரி, பரஸ்பர வரி மற்றும் ரஷ்ய எண்ணெய் வாங்கியதற்கான அபராத வரி ஆகியவை அடங்கும்.. பின்னர் நீண்ட இழுபறிக்கு பின்னர், இரு நாடுகளுக்கும் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டு, வரி விகிதம் 18 விழுக்காடாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தை பயன்படுத்தி டிரம்ப், விதித்த வரிகள் அனைத்தும் சட்டவிரோதமானவை என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கடுப்பான டிரம்ப், ஏற்கெனவே உள்ள வரிகளோடு சீனா போன்ற நாடுகளுக்கு மேலும் 10 சதவிகிதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒரு “Win-Win” சூழ்நிலை தான். டிரம்ப் வரிகளை உயர்த்தும் முன், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்தியப் பொருட்களின் மீதான சராசரி வரி வெறும் 2.5 சதவிகிதம் முதல் 3 சதவிகிதம் வரை மட்டுமே இருந்தது.
பல அத்தியாவசியப் பொருட்கள் குறிப்பாக மருந்துகள், பூஜ்யம் வரியிலேயே ஏற்றுமதி செய்யப்பட்டன. வைரங்கள் மற்றும் தங்கம் போன்ற ஆபரணங்களுக்கு 2 சதவிகித வரி மட்டுமே வசூலிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் டிரம்பின் புதிய 10% வரி அறிவிப்பு ஆகியவற்றால் இந்திய மருந்துத்துறை, ஜவுளித்துறை ஆகியவை மிகப்பெரிய பலனை அடையும். கடந்த ஆண்டு நிலவிய 50 சதவிகித வரிச் சுமையோடு ஒப்பிடும்போது, இது ஒரு மறுமலர்ச்சி என்றே சொல்லலாம்.
இந்திய ஜவுளித்துறைக்கு இதுவரை இருந்த மிகப்பெரிய சவால் சீனா மற்றும் வங்கதேசம் நாடுகள் தான். சீனா மீதான வரிகள் இன்னும் 40-50% என்ற அளவிலேயே தொடரும் என தெரிகிறது. இதேப்போல் வங்கதேசத்திற்கு வழங்கி வந்த வரிச்லுகைகளை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்க நிறுவனங்களான Walmart, Gap, Target போன்றவை சீனாவைத் தவிர்த்து, இந்தியாவிற்கு அதிக ஆர்டர் அளிக்கும்.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பட்டு ஆடைகள் மற்றும் சில குறிப்பிட்ட கைத்தறிப் பொருட்களுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காஞ்சிபுரம் பட்டு, பனாரஸ் துணிகள் மற்றும் இந்தியக் கைத்தறிப் பொருட்களுக்கு அமெரிக்கச் சந்தையில் மவுசு கூடும். அடுத்த 150 நாட்களில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வரும் ஜவுளி ஆர்டர்கள் 25% முதல் 30% வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர் ஆகிய தமிழ்நாட்டின் ஜவுளி உற்பத்தி மையங்களில் இருந்து கணிசமான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி அதிகரிக்கும். இந்த 10 சதவிகித வரி பிப்ரவரி 24 முதல் அமலுக்கு வருகிறது. ஆனால் இது 150 நாட்களுக்கு மட்டுமே செல்லும் தற்காலிக வரி. அதற்குள் டிரம்ப் மீண்டும், நாடாளுமன்றம் மூலமாக தனது 18 வரி ஒப்பந்தத்தைச் சட்டப்பூர்வமாக நிலைநாட்ட முயற்சிப்பார்.


