கூச்சிங், பிப்ரவரி 21, 2026:
நேற்று கூச்சிங், கம்போங் கொலோங் சுங்கை தெங்கா (Kampung Kolong Sungai Tengah) பகுதியில் உள்ள ஆற்றில் விழுந்த 17 வயது சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கிப் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மாயமான சிறுவன் 17 வயதுடைய ஃபஹ்ரில் சாகுவான் ஹஸ்புல்லா (Fahril Zaquan Hasbullah) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 4.32 மணியளவில் இந்த விபத்து குறித்துத் தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்தது என்று , சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
முதற்கட்ட தகவல்களின்படி, அந்தச் சிறுவன் தனது நண்பனுடன் ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆற்றில் விழுந்துள்ளார். ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால், அந்தச் சிறுவன் விரைவாக அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரோடு இருந்த நண்பனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. உடனடியாக அவர் அருகில் இருந்த பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளார்.
பெட்ரா ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஒன்பது பணியாளர்கள் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆற்றங்கரையோரங்கள் மற்றும் நீர்ப்பரப்பு பகுதிகளில் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
நேற்று மாலை 6.30 மணி நிலவரப்படி, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்த போதிலும் சிறுவன் இன்னும் கண்டறியப்படவில்லை




