Last Updated:
சிவசேனா, சாம்னா பத்திரிகையில், INDIA கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் அல்லது மம்தா பானர்ஜி தலைவராக வேண்டும் என வலியுறுத்தி, கருத்து வேறுபாடுகள் பலவீனத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அல்லது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை இந்தியா கூட்டணியின் தலைவராக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான கட்டுரையில் பாஜகவின் ஆதிக்கத்தை வீழத்த வேண்டுமானால், இந்தியா கூட்டணி தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் களைய வேண்டும் என்றும், மு.க.ஸ்டாலின் அல்லது மம்தா பானர்ஜி போன்ற ஒரு வலிமையான தலைவரை இந்தியா கூட்டணியின் தலைவராக இப்போதே அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
மேலும், ராகுல் காந்தி தீவிரமாகப் போராடினாலும், காங்கிரஸ் கட்சிக்குள் மூத்த தலைவர்களிடையே நிலவும் முரண்பட்ட கருத்துக்கள் கூட்டணிக்கு பலவீனத்தை தருவதாகவும், குறிப்பாக கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளே தங்களுக்குள் மோதிக்கொள்வது பாஜகவிற்கே சாதகமாக முடியும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத உணர்வுகளை முன்வைத்து அரசியல் செய்யும் தற்போதைய அரசை எதிர்கொள்ள, தேர்தல் வரும் வரை காத்திருக்காமல் ஒரு தெளிவான தலைமையின் கீழ் அணி திரள்வது காலத்தின் கட்டாயம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதே கருத்தை சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் வலியுறுத்தி இருந்தார்.
“இந்தியா கூட்டணிக்கு மு.க.ஸ்டாலினும் தலைமை ஏற்கலாம்” – உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா வலியுறுத்தல்


