Last Updated:
இந்தூர் நகரில் பியூஷ், காதலி வாட்ஸ்ஆப்பில் வேறு ஒருவருடன் பேசுவதாக சந்தேகித்து, வீட்டில் அழைத்து கத்தியால் கொலை செய்து, மும்பையில் பதுங்கிய நிலையில் போலீசால் கைது செய்யப்பட்டார்.
காதலி வாட்ஸ்ஆப்பில் வேறு யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறார் என்கிற சந்தேகத்தில் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று கத்தியால் குத்தி கொலை செய்த காதலன் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.பி.ஏ. படித்து வந்தவர் 24 வயது பெண். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் தனது காதலன் பியூஷ் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அவரது உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கொலை தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மேலும் பியூஷ் வீட்டிற்கு வெளியில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து பார்த்தனர்.
அதில் பியூஷ் உள்ளே செல்லும்போது தனது காதலியுடன் செல்வதும், வெளியில் வரும்போது ஒரு பையை எடுத்துக்கொண்டு தனியாக வருவதும் பதிவாகி இருந்தது. கொலை நடந்தது முதல் பியூஷ் தலைமறைவாகியிருந்தார். அவரது செல்போன் நம்பரை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் பியூஷ் மும்பையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்தூர் தனிப்படை போலீசார் மும்பையில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.
மும்பை போலீசார் உதவியுடன் பன்வெல் பகுதியில் பதுங்கியிருந்த பியூஷை கைது செய்தனர். பியூஷ் பில்லி சூனியம் வைக்கும் பகுதியில் சுற்றி வந்தது போலீசாரின் சந்தேகத்தை அதிகரித்தது. விசாரணையில, அவர் பில்லி சூனியம் வைப்பவர்கள் துணையோடு தனது காதலியின் ஆவியிடம் பேச முயற்சி செய்ததாக போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார். தனது காதலியின் ஆவியோடு பேசி செய்த செயலுக்காக மன்னிப்பு கேட்க முயற்சி செய்ததாக போலீஸாரிடம் கூறியிருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் கொலைக்கான திடுக்கிடும் காரணம் தெரியவந்தது. பியூஷின் காதலி வாட்ஸ்ஆப் மூலம் வேறு ஒருவருடன் போனில் பேசுவதாக பியூஷ் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பியூஷ் வற்புறுத்தியிருக்கிறார். ஆனால் அப்பெண் திருமணம் செய்ய முடியாது என்று மறுத்து விட்டார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் வெடித்துள்ளது. சம்பவத்தன்று காதலியை அழைத்துக் கொண்டு பியூஷ் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வைத்து அப்பெண்ணுடன் உறவு கொள்ள பியூஷ் விரும்பி இருக்கிறார். ஆனால் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அப்பெண் மறுத்துள்ளார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த பியூஷ், காதலிக்கு தன்னை பிடிக்கவில்லை. வேறு யாரையோ பிடித்திருக்கிறது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
காதலியை தீர்த்துக் கட்ட வேண்டும் என்கிற முடிவுக்கு வந்த அவர், ‘ஒரு பரிசு கொடுக்கப் போகிறேன்’ என்று கூறி அப்பெண்ணின் கை, கால்களை கயிற்றால் கட்டிப் போட்டுள்ளார். அதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவித்து சத்தம்போட்டபோது அப்பெண்ணின் வாயில் துணியை வைத்து அடைத்துள்ளார். அதன்பின் அவரை மூச்சு விட முடியாமல் அழுத்திப் பிடித்து இறுதி மூச்சை நிறுத்தினார். அதன்பின்னும் கோபம் தனியாத பியூஷ் கத்தியை எடுத்து அவரது நெஞ்சிலேயே மாறி மாறி குத்தியிருக்கிறார்.
கொலை செய்த பிறகு வெளியில் சென்று பீர் வாங்கி வந்து அப்பெண்ணின் உடல் அருகில் அமர்ந்து பீர் குடித்துள்ளார். அதன் பிறகு உடைகளை மாற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். செல்லும்போது காதலியின் செல்போனை எடுத்துக் கொண்டு தப்பச் சென்ற பியூஷ் மும்பையில் வைத்து அந்த போனை உடைத்துப் போட்டுள்ளார். காதலி மீதான சந்தேகத்தால் அவரை காதலனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


