கோலாலம்பூர்:
மலேசியாவில் தற்போது சீனப் புத்தாண்டு மற்றும் ரமலான் பண்டிகைக் காலங்கள் நெருங்கியுள்ள நிலையில், காசநோய் (Tuberculosis) பரவும் வேகம் அதிகரிக்கக்கூடும் என கேலன் மையத்தின் (Galen Centre) தலைமை நிர்வாக அதிகாரி அஸ்ருல் முகமட் காலிப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமூக நிகழ்வுகள், குடும்ப ஒன்றுகூடல்கள் மற்றும் காற்றோட்டம் குறைந்த பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதால், காற்றின் வழியாகப் பரவக்கூடிய இத்தொற்று மிக எளிதாக மற்றவர்களுக்குப் பரவும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாகப் பொதுப் போக்குவரத்து, பணியிடங்கள், தங்குமிடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் ஒருவருக்குத் தொற்று இருப்பின், அவர் அறியாமலேயே பலருக்கு அதனைப் பரப்ப வாய்ப்புள்ளது. எனவே, பண்டிகைக் காலக் கொண்டாட்டங்களின் போது மக்கள் நெரிசலான இடங்களுக்குச் செல்லும்போதும், பயணங்களின் போதும் முகக்கவசம் அணிவது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வீடுகளில் நடைபெறும் ஒன்றுகூடல்களின் போது நல்ல காற்றோட்டத்தை உறுதி செய்யக் கதவு மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைப்பது கிருமிப் பரவலைக் குறைக்க உதவும்.
முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இவ்விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட கால இருமல் (இரண்டு வாரங்களுக்கு மேல்), இருமும்போது இரத்தம் வருதல், திடீர் உடல் எடை குறைவு, காய்ச்சல் மற்றும் பசியின்மை போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஆரம்பக்காலத்திலேயே கண்டறிந்து தொடர் சிகிச்சை பெறுவதன் மூலம் காசநோய் பரவலைத் தடுத்து முழுமையாகக் குணமடைய முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.




