பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று இலங்கையின் கொழும்பு மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.
இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை குரூப் ஏ-யில் விளையாடிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தலா 4 புள்ளிகளுடன், குரூப் ஏ புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. நடப்பு சாம்பியனான இந்தியா டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற ஆயத்தமாக வருகிறது.
இதுவரை இந்தியாவும், பாகிஸ்தானும் 8 போட்டிகளில் மோதியுள்ளன. இவற்றில், இந்திய அணி 7 போட்டிகளிலும், பாகிஸ்தான் 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
அதிகபட்ச ஸ்கோர் 2022 அக்டோபர் 23 ஆம் தேதியன்று இந்தியா எடுத்த 160 ரன்களே ஆகும். குறைந்த பட்சமாக் 2024 ஜூன் 9 ஆம் தேதி பாகிஸ்தான் அணி 113 ரன்கள் எடுத்தது குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது.
ரன்கள் வித்தியாசத்தை பொருத்தளவில் 2024 ஜூன் 9 ஆம் தேதியன்று நியூயார்க்கில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. விக்கெட் அடிப்படையில் அக்டோபர் 24, 2022 அன்று துபாயில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளில் தனி நபர் எடுத்த அதிக ரன்னாக விராட் கோலி எடுத்திருக்கும் 312 ரன்கள் உள்ளது. ஒரு போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக 2022 அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் உள்ளது.
மற்ற புள்ளி விபரங்கள் பின்வருமாறு-
ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள்: இந்தியாவின் விராட் கோலி (2022 இல்), பாகிஸ்தானின் மிஸ்பா-உல்-ஹக் (2007 இல்) மற்றும் பாகிஸ்தானின் இப்திகார் அகமது (2022 இல்) தலா 4 சிக்ஸர்கள்.
அதிக விக்கெட்டுகள்: ஹாரிஸ் ரவூஃப் (பாகிஸ்தான்), இர்பான் பதான் மற்றும் ஹர்திக் பாண்ட்யா (இருவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்) தலா 6 விக்கெட்டுகள்.
சிறந்த பந்துவீச்சு: செப்டம்பர் 14, 2007 அன்று டர்பனில் பாகிஸ்தானின் முகமது ஆசிஃப் நான்கு ஓவர்களில் 4/18.
அதிக கேட்சுகள்: இந்தியாவின் சுரேஷ் ரெய்னா மூன்று போட்டிகளில் 5 கேட்சுகள்.
அதிகபட்ச பார்ட்னர்ஷிப்: அக்டோபர் 24, 2022 அன்று துபாயில் பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இடையே முதல் விக்கெட்டுக்கு 152 ரன்கள்.

