Last Updated:
பிஎன்பி முன்னெடுக்கும் ‘பங்களாதேஷ் ஃபர்ஸ்ட்’ கொள்கை வெற்றி பெற வேண்டுமானால், அந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்தியாவுடனான வர்த்தகம் மற்றும் போக்குவரத்து அத்தியாவசியமானது.
வங்கதேசத்தில் பிப்ரவரி 13, 2026 அன்று நடந்து முடிந்த பொதுத்தேர்தலில், வங்கதேச தேசியவாத கட்சி (BNP) நாடாளுமன்றத்தில் பெருவாரியான இடங்களை வென்று மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக லண்டனில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மான் சமீபத்தில் நாடு திரும்பிய நிலையில், அவரே அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 மாணவர் போராட்டங்களுக்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது என்பதால், இது அந்நாட்டின் ஜனநாயக வரலாற்றில் மிக முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது. ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவுடன் விரிசல் ஏற்பட்ட உறவைச் சீரமைக்கும் விதமாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தாரிக் ரஹ்மானுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததுள்ளார்.
மேலும் ஒரு முற்போக்கான வங்கதேசத்திற்கு இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும் என்று உறுதியளித்துள்ளார். கடந்த கால வரலாற்றைப் பார்க்கும்போது, பிஎன்பி கட்சியின் முந்தைய ஆட்சிக்காலங்கள் இந்தியாவுக்குச் சவாலானதாகவே இருந்துள்ளன. குறிப்பாக 2001-2006 காலகட்டத்தில் பிஎன்பி – ஜமாத் கூட்டணி ஆட்சியின் போது, இந்தியாவின் வடகிழக்கு ஆயுதக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுத்தது, எல்லைப் பிரச்னைகள் மற்றும் பாகிஸ்தானுடனான நெருக்கம் போன்றவை இரு நாடுகளுக்கும் இடையே பெரும் அவநம்பிக்கையை ஏற்படுத்தின.
இருப்பினும், தற்போதைய சூழலில் பிஎன்பி பெற்றுள்ள வெற்றி, அந்நாட்டில் நிலவிய தீவிரவாத சக்திகளின் செல்வாக்கை ஓரளவுக்கு மட்டுப்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் ராஜதந்திரச் சரிவை நிலைப்படுத்துவதற்கான ஒரு “மறுதொடக்கப் புள்ளியாக” அமையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்திருப்பது மற்றும் அவரை நாடுகடத்தக் கோரும் வங்கதேசத்தின் கோரிக்கை போன்ற விவகாரங்கள் இன்னும் பதற்றத்தை நீட்டிக்கச் செய்தாலும், பொருளாதாரத் தேவைகள் இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் என்று நம்பப்படுகிறது.
பிஎன்பி முன்னெடுக்கும் ‘பங்களாதேஷ் ஃபர்ஸ்ட்’ கொள்கை வெற்றி பெற வேண்டுமானால், அந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்தியாவுடனான வர்த்தகம் மற்றும் போக்குவரத்து அத்தியாவசியமானது.
வங்கதேசத்தில் பிஎன்பி வசமான அதிகாரம்.. இந்தியா உறவில் உறவில் புதிய அத்தியாயம் தொடங்குமா?


