Last Updated:
மலையோர கிராம மக்கள் காட்டு விலங்குகள் தாக்கும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவார்கள்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் காட்டு யானைகள் கூட்டமாக வந்து தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பொதுவாக காடு மற்றும் மலையோர கிராம மக்கள் காட்டு விலங்குகள் தாக்கும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவார்கள். நிம்மதியாக வேலைக்கு சென்று வர முடியாது. குழந்தைகளை நம்பி பள்ளிக்கு தனியாக அனுப்பி வைக்க முடியாது. இரவானால் வெளியில் நடமாடுவது என்பதில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் தான் ஜார்க்கண்ட்டில் சர்சூ பகுதியில் உள்ள கொண்ட்வார் கிராமத்திற்குள் காட்டு யானைகள் கொத்து கொத்தாக ஊருக்குள் நுழைந்துள்ளன.
யானைப் படை போர்க்களத்தில் நுழைந்தது போல் கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள் தனக்கு முன் தென்பட்ட அனைத்தையும் தூக்கி வீசி துவம்சம் செய்துள்ளன. கிராம மக்கள் அனைவரும் காட்டு யானைகளை பார்த்ததும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தலை தெறிக்க ஓடியுள்ளனர். அதிகாலை நேரம் என்பதால் பலரும் தங்கள் வீட்டுக்குள் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு குடும்பத்தினரை வீட்டோடு சேர்ந்து மிதித்து சூறையாடிய யானைகள் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த 4 பேரின் உயிரையும் காவு வாங்கியிருக்கின்றன.
இதைப் பார்த்து அலறித் துடித்த கிராம மக்கள் எதுவும் செய்ய முடியாமல் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். கூட்டத்திற்குள் புகுந்த யானைகள் துரத்தி துரத்தி வேட்டையாடியதில் மேலும் இருவர் உயிரிழந்தனர். யானைகளின் இந்த கொடூரத் தாக்குதலில் குழந்தை ஒன்று பலத்த காயமடைந்தது. உயிரை பணயம் வைத்து குழந்தையை மீட்ட இளைஞர்கள், மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த யானைக் கூட்டம் போகாரோ, ராம்கர் மற்றும் ஹசாரிபாக் உள்ளிட்ட பகுதிகளை முற்றுகையிட்டு சுற்றி வருகின்றன.
யானைகள் சைக்காலஜி அறிந்து அதனைஅமைதியான முறையில் காட்டுக்.குள் விரட்டும் முயற்சியை கிராம மக்களே கெடுத்து விடுவதாக வனத்துறையினர் கூறுகின்றனர். இதற்கு முன்பும் இதேபோல் யானைகள் தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இப்பகுதியில் காட்டுயானைகள் மற்றும் கிராம மக்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் உச்சமடைந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். யானைகளை துன்புறுத்தாமல் அவற்றின் வாழ்விடத்திற்கு கொண்டு சென்று விடுவதே தங்களது நோக்கம் என்றும் வனத்துறையினர் கூறுகின்றனர்.


