
ரஷ்யாவுடன் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தேர்தல் மற்றும் வாக்கெடுப்பை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யா–உக்ரைன் மோதல் தொடங்கி நான்காவது ஆண்டை எட்டும் பிப்ரவரி 24 ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே சமாதான ஒப்பந்தத்தை நிறைவு செய்ய அமெரிக்கா ஜூன் மாதத்தை காலக்கெடுவாக முன்வைத்துள்ளது. இந்த சூழலில் உக்ரைனில் நடைபெறக்கூடிய அரசியல் மாற்றங்கள், போர் நிலையை சமாதான திசைக்கு கொண்டு செல்ல வாய்ப்பு இருக்கலாம் என சில அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், டொன்பாஸ் பிராந்தியத்திலிருந்து உக்ரைன் விலக வேண்டும் என்ற கோரிக்கையை ரஷ்யா தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இந்த நிபந்தனையை உக்ரைன் அரசு தெளிவாக நிராகரித்துள்ளது.
இதற்கிடையில், கிழக்கு உக்ரைனில் முக்கியமான போக்குவரத்து மையமாகக் கருதப்படும் போக்ரோவ்ஸ்க் நகரை முழுமையாகக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் தீவிர தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலைமையால் பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

