ஆந்திர மாநிலம் திருப்பதியில் பிரபலமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவமனை அமைந்துள்ளது. அந்த மருத்துவமனையில் மருந்தகப் பணியில் வெங்கடேஸ்வர ராவ் என்பவர் ஈடுபட்டுள்ளார். மருத்துவமனை வேலை முடிந்த பின்னர், பார்ட் டைம் ஜாப் ஆக பைக் டாக்ஸி ஓட்டி வந்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு வெங்கடேஷ்வராவின் பைக்கில் பயணம் மேற்கொண்ட சுரேஷ்குமார் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
அவரை பார்த்ததுமே ஆபிஸர் போன்று வாட்டசாட்டமாக டிப்-டாப்பாக இருந்துள்ளார். உடனே, அவரிடம் சார் நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்று வெங்கடேஸ்வரா கேட்டுள்ளார். அதற்கு, டெல்லியில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் பணியாற்றி வந்ததாக சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரியான தான், தற்போது பணி இடமாற்றம் பெற்று ஹைதராபாத்திற்கு வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், விடுமுறைக்காக திருப்பதியில் உள்ள தனது சித்தி வீட்டுக்கு வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். திடீரென, ஐபிஎஸ் ஆபீஸர் என்பதற்கு ஆதாரமாக சட்டைப் பையில் வைத்திருந்த அடையாள அட்டையையும் எடுத்து காண்பித்துள்ளார். தொடர்ந்து பேச்சுக் கொடுத்த சுரேஷ்குமாரிடம், தனது படிப்புக்கு ஏற்ப அரசு வேலை ஏதும் கிடைக்குமா சார் என்று வெங்கடேஸ்வரா அப்பாவியாக கேட்டுள்ளார்.
உடனே, ஹைதராபாத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆலோசகர் பணி காலியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். அந்த வேலையை உங்களுக்கு வாங்கி கொடுப்பதாக உறுதியளித்துள்ளார். அதைக் கேட்டதும் வெங்கடேஸ்வராவுக்கு அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் காப்பியே கிடைத்ததாக நினைத்து குதூகலித்துள்ளார். ஆனால், அதற்கு லட்சங்களில் பணம் கை மாறினால், கை மேல் பணி ஆணை கிடைத்துவிடும் என சுரேஷ் குமார் நம்பிக்கை அளித்துள்ளார்.
இதையடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்திருந்த ஒன்றரை லட்சம் ரூபாயை வெங்கடேஷ்வரா கொடுத்துள்ளார். பணத்தை வாங்கியதும் சுரேஷ்குமாரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் இன்றைக்கு நாளைக்கு என்று இழுத்தடித்ததால் பொறுமை இழந்த வெங்கடேஷ்வரா, வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.
இந்த நிலையில் திருப்பதியில் வைத்து சுரேஷ்குமாரை போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர். பின்னர், நடத்திய விசாரணையில் அவர் ஐபிஎஸ் அதிகாரி என்று கூறி மோசடி செய்தது அம்பலமானது. மேலும், போலி அடையாள அட்டையை வைத்துக் கொண்டு வெங்கடேஷ்வராவை ஏமாற்றியதும் உறுதியானது.
ஐபிஎஸ் அதிகாரி என்று கூறிக் கொண்டு அரசு வேலை ஆசையில் இருக்கும் அப்பாவி இளைஞர்களை குறிவைத்து லட்சக்கணக்கில் சுருட்டிய மோசடி மன்னன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
