Last Updated:
வங்கதேசத்தில் அமையும் புதிய அரசு இந்தியாவின் மீது கடுமையான நிலைப்பாட்டை எடுத்தால், இது இரு நாட்டு உறவுகளையும் தாண்டி மாநில அரசியலிலும் சிக்கலை உருவாக்கும்
வங்கதேச தேர்தல் முடிவுகள் மேற்கு வங்கம் மற்றும் அசாம் அரசியலில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்த 2024-ஆம் ஆண்டு மாணவர்களின் போராட்டத்தால் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து, முகமது யூனிஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, 300 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், அண்மையில் மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (BNP) அடங்கிய கூட்டணிக்கும், ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையிலான கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
தேர்தலின் முடிவுகள், இந்தியாவின் அண்டை மாநிலங்களான மேற்கு வங்கம் மற்றும் அசாமின் அரசியலில் மிக முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, இன்னும் சில மாதங்களில் (மார்ச் – மே 2026) இந்த இரு மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளதால், வங்கதேச அரசியல் மாற்றம் இங்கே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அசாமில் ‘சட்டவிரோத ஊடுருவல்’ என்பது எப்போதும் முதன்மையான தேர்தல் விவகாரணமாக பார்க்கப்படுகிறது. வங்கதேசத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற அமைப்புகள் வலிமை பெற்றால், அது எல்லையோர பாதுகாப்பில் அச்சத்தை ஏற்படுத்தலாம். இதனை முன்வைத்து, பாஜக (BJP) தனது தேர்தல் பிரச்சாரத்தில் NRC மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA) அவசியத்தை மீண்டும் தீவிரமாக வலியுறுத்தும்
மேற்கு வங்கத்திலும் இதேபோன்ற துருவமுனைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வங்கதேசத்தில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் எல்லையோர மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் வாக்குகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
முன்பு BNP-ஜமாத் ஆட்சியில் இருந்தபோது, இந்தியாவின் வடகிழக்கு மாநில பிரிவினைவாத குழுக்களுக்கு உதாரணமாக ULFA போன்ற குழுக்களுக்கு வங்கதேசம் புகலிடமாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. தற்போது மீண்டும் அதே போன்றதொரு ஆட்சி அமைந்தால், அசாம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற கவலை நிலவுகிறது. இது அசாமின் தற்போதைய ஆளுங்கட்சிக்கு ஒரு வலுவான பாதுகாப்பு சார்ந்த பிரச்சார ஆயுதமாக அமையும்.
வங்கதேசத்தில் நிலவும் அரசியல் சூழலால் அங்கிருக்கும் இந்துக்கள் பாதிக்கப்பட்டால், அதன் எதிர்வினை மேற்கு வங்கத்தில் கடுமையாக இருக்கும். குறிப்பாக, மத்துவா சமூகத்தினர் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வந்து குடியேறிய மக்களின் வாக்குகள் மேற்கு வங்க தேர்தலில் வெற்றியைத் தீர்மானிப்பவை. அங்குள்ள நிலவரத்தைப் பொறுத்து இவர்களின் வாக்கு வங்கி மாறும்.


