Last Updated:
டி-20 உலகக் கோப்பையில் இந்தியாவில் விளையாட மறுத்த வங்கதேச அணிக்கு அபராதம் இல்லை, பாகிஸ்தான் இந்தியா போட்டியில் பங்கேற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவில் விளையாட மறுப்பு தெரிவித்ததற்காக வங்கதேச அணிக்கு எந்தவித அபராதமும் விதிக்கப்படாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வங்கதேசம் நீக்கப்பட்ட நிலையில், அந்நாட்டுக்கு ஆதரவளிக்கும் விதமாக, இந்தியாவுக்கு எதிரான போட்டிகளை தாங்கள் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் அறிவித்திருந்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் இந்தியா உடனான போட்டியில் பங்கேற்பதாக பாகிஸ்தான் அறிவித்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச கிரிக்கெட் சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உலகக் கோப்பை போட்டியில் விளையாட மறுத்ததற்காக வங்கதேச அணிக்கு அபராதமோ அல்லது எந்தவிதமான தடையோ விதிக்கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
2031 உலகக் கோப்பைக்கு முன்னதாக, வங்கதேசத்தில் ஐசிசி போட்டியை நடத்துவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொழும்புவில் வரும் 15 ஆம் தேதி நடைபெறும் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்பதாக அறிவிப்பு வெளியானவுடன் மும்பையில் இருந்து கொழும்புக்கு செல்லும் விமான டிக்கெட் கட்டணம் 10 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஒருவர் விமானத்தில் மும்பையில் இருந்து கொழும்பு சென்றுவிட்டு மீண்டும் மும்பை திரும்புவதற்கு 60 ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டி உள்ளது


