Last Updated:
ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தினர்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மற்றும் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி நரவனே எழுதியுள்ள புத்தகத்தில் உள்ள சீன ஆக்கிரமிப்பு பற்றிய தகவல்கள் உள்ளிட்டவை தொடர்பாக கடந்த வாரம் கடும் அமளி ஏற்பட்டது. அதனால் மக்களவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், திங்கள்கிழமை அவை கூடியதும், மீண்டும் அப்பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் கிளப்பியதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், டி.ஆர். பாலு, துரை வைகோ உள்ளிட்ட பலர் ஆலோசனை நடத்தினர்.
அதில் ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் தடுத்து ஆளுங்கட்சிக்கும் பிரதமருக்கும் மட்டும் ஆதரவாக அவையை நடத்துவதாலும், பிரதமருக்கு எதிர்க்கட்சி பெண் உறுப்பினர்கள் இடையூறு செய்வார்கள் என்று பேசியதாலும் இந்த ஆலோசனை நடைபெற்றதாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் போது அவைக்கு வெளியே மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தது தொடர்பாக அவர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கக் கோரி, மாநிலங்களவை செயலகத்தில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா கடிதம் அளித்துள்ளார். இதனை பின்னர் பரிசீலிப்பதாக அவைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்? எதிர்க்கட்சிகள் போட்டுள்ள முக்கிய திட்டம்

