Last Updated:
டிராவிட்டின் பேச்சை மதித்த சேவாக், தனது அதிரடியைக் குறைத்துக்கொண்டு டெஸ்டின் இரண்டாம் நாளை முடித்தார்.
டிராவிட்டின் ஆலோசனையை கேட்டு செயல்பட்டதால் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்தர் சேவாக் முச்சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார். இதுகுறித்து வெளிவந்துள்ள தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டுள்ளது.
மும்பையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த போட்டியில் சேவாக் வெறும் 254 பந்துகளில் 293 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னன் வீரேந்தர் சேவாக், டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முச்சதங்களை விளாசிய ஒரே இந்தியர் என்ற பெருமைக்குரியவர். ஆனால், அவர் தனது மூன்றாவது முச்சதத்தை அடித்து உலக சாதனை படைக்க வேண்டிய வாய்ப்பு, ராகுல் டிராவிட் கொடுத்த ஒரு சிறிய ஆலோசனையால் கைநழுவிப் போனது குறித்த தகவல் இப்போது வைரலாகி வருகிறது.
இலங்கைக்கு எதிராக மும்பையில் நடந்த அந்த டெஸ்ட் போட்டியில், சேவாக் தனது வழக்கமான பாணியில் இலங்கை பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். ஆட்டத்தின் இரண்டாம் நாள் முடிவில் சேவாக் 284 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இன்னும் சில ஓவர்களே எஞ்சியிருந்த நிலையில், அவருடன் களத்தில் இருந்த ராகுல் டிராவிட் ஒரு அறிவுரை வழங்கினார்.
அதாவது, “சேவாக், இன்று ஆட்டம் முடிய இன்னும் 4 ஓவர்களே உள்ளன. இப்போது விக்கெட்டை இழக்காமல் நிதானமாக ஆடி ஆட்டத்தை முடித்துக்கொள். நாளை காலை வந்து பொறுமையாக முச்சதத்தை அடிப்பதோடு மட்டுமல்லாமல், 400 அல்லது 500 ரன்கள் கூட நீ எடுக்கலாம்” என்று டிராவிட் ஆலோசனை கூறியுள்ளார்.


