Last Updated:
பிரையன் பென்னட் மற்றும் பிரென்டன் டெய்லர் இணை பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றது.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் ஓமன் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் குரூப் பி பிரிவில் 8 ஆவது ஆட்டமாக ஜிம்பாப்வே மற்றும் ஓமன் அணிகள் மோதிய போட்டி இலங்கையின் கொழும்பு நகரில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்த அதிக அனுபவம் இல்லாத ஓமன் அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
ஆரம்பம் முதலே ஜிம்பாப்வே அணியின் பவுலர்கள் துல்லியமாக பந்துகளை வீசி ஓமன் பேட்ஸ்மேன்களை நிலை குலைய செய்தனர். அந்த அணியில் பேட்ஸ்மேன்கள் ஆமிர் கலீம், கேப்டன் ஜதிந்தர் சிங் தலா 5 ரன்களும், ஹம்மாத் மிர்சா, கரன் சோனாவாலே ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
அதிகபட்சமாக வினாயக் சுக்லா 28 ரன்களும், சுபியான் முகமது 25 ரன்களும் சேர்க்க 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஓமன் அணி 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடத் தொடங்கினர். தொடக்க வீரர் டடிவன்ஷி மருமனி 21 ரன்களிலும், டியோன் மையர்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து இணைந்த பிரையன் பென்னட் மற்றும் பிரென்டன் டெய்லர் இணை பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றது.
பென்னட் 48 ரன்களும், டெய்லர் 31 ரன்களும் சேர்த்தனர். 13.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஜிம்பாப்வே அணி 106 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


