கோட் சூட், BMW காருடன் தொழிலதிபர் போன்று காட்சியளிக்கும் இந்த இளைஞர், கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியதில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர் அல்ல. ஊரை அடித்து உலையில் போட்டு பலரது சேமிப்புகளை திருடி, அதில் கிடைத்த பணத்தில் பவுசாக வாழ்ந்து வந்தவர். 15 வயதில் திருட்டு வழக்கில் கைதாகி சிறைசென்று திரும்பியவர், எம்.டெக் படித்து முடித்துவிட்டு ஹைடெக் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 60-க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவருக்கு சிறை விருந்து வைக்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன?
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்தவர் அச்சி மகேஷ் ரெட்டி. 27 வயதான இவர் M.Tech படித்துள்ளார். படித்த படிப்புக்கு ஏற்ப தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர், அண்மைக் காலமாக சொந்த ஊர் திரும்பும் போதெல்லாம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள வீடுகளில் திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே ஒரே ஃபார்முலாவில் வீடுகளில் கைவரிசை காட்டும் கொள்ளையனை பிடிக்க முடியாமல் போலீசார் திணறியுள்ளனர். பல இடங்களில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் டிப்-டாப் ஆசாமி ஒருவர் வந்து சென்றது தெரியவந்துள்ளது. முகமூடி, தொப்பி மற்றும் கையுறையுடன் வரும் நபர், சுத்தியல், ஸ்க்ரூடிரைவர், இடுக்கி, சுவற்றை துளையிடும் இயந்திரங்களுடன் சுற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தபோதும், கொள்ளையனை நெருங்க முடியாமல் போலீசார் திக்குமுக்காடியுள்ளனர்.
இந்த சூழலில் இரண்டு நாட்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்தில் வைத்து ஐ.டி. ஊழியர் அச்சி மகேஷ் கையும் களவுமாக சிக்கியுள்ளார். விசாரணையில், போலீசாரே மிரண்டுபோகும் அளவுக்கு தொழில்முறை திருடனாக அவர் உலா வந்தது தெரியவந்துள்ளது.
உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 15 வயதிலேயே 4 வீடுகளில் மகேஷ் கைவரிசை காட்டியுள்ளார். இந்த வழக்கில் கைதானவர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்ததவர் எம்.டெக் படித்து, பிரபல ஐடி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். அங்கு கிடைத்த சம்பளம், தான் விரும்பிய சொகுசு வாழ்க்கைக்கு பற்றாக்குறையாக இருந்துள்ளது. இதனால், திருட்டில் ஈடுபடுவதை பிரதான தொழிலாக தேர்ந்தெடுத்துள்ளார்.
அத்துடன், அடிக்கடி வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றுலா சென்று உல்லாசமாக இருந்துள்ளார். தற்போது, கைதாகியுள்ள மகேஷிடம் இருந்து 87 சவரன் தங்க நகைகள், சுமார் 4 கிலோ வெள்ளிப் பொருட்கள், சொகுசு கார் உள்ளிட்டவற்றை போலீசார் மீட்டனர்.
சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 60-க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட எம்.டெக் படித்த ஐ.டி. ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

