குவாந்தான், பிப்ரவரி 8, 2026:
குறுகிய காலத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி நடத்தப்படும் போலி முதலீட்டுத் திட்டங்களில் சிக்கிப் பணத்தை இழக்கும் சம்பவங்கள் மலேசியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், பகாங் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வியாபாரி தனது சேமிப்பு மற்றும் நண்பர்களிடம் வாங்கிய கடனைப் போலி முதலீட்டில் பறிகொடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முகநூலில் வந்த ஒரு முதலீட்டு விளம்பரத்தை அந்த 51 வயது வியாபாரி பார்த்துள்ளார். பின்னர் ‘வாட்ஸ்அப்’ (WhatsApp) மூலம் அவரைத் தொடர்பு கொண்ட மர்ம நபர், 3 முதல் 7 நாட்களுக்குள் 12 விழுக்காடு லாபம் தருவதாக ஆசை காட்டியுள்ளார். இதனை நம்பிய அந்த வியாபாரி, கடந்த 2025 டிசம்பர் 4 முதல் 2026 ஜனவரி 27-ஆம் தேதி வரை மொத்தம் 19 முறை இரண்டு வெவ்வேறு வங்கி கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பியுள்ளார் என்று, பகாங் மாநில போலீஸ் தலைமை ஆணையர் டத்தோ யாயா ஒஸ்மான் தெரிவித்தார்.
அவருக்குத் திரையில் (Screen) காட்டப்பட்ட லாபத் தொகை மட்டும் RM2.4 மில்லியன். இதனைப் பார்த்து உற்சாகமடைந்த அவர், தனது மொத்தப் பணத்தையும் முதலீடு செய்துள்ளார். தனது ‘லாபத் தொகையை’ திரும்ப எடுக்க முயன்றபோது, அந்த மர்ம நபர் லாபத்தில் 10 விழுக்காட்டை முன்வைப்பாகச் செலுத்தினால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.
அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த வியாபாரி, சனிக்கிழமை (பிப்ரவரி 7) குவந்தான் போலீஸ் தலைமையகத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 420-இன் கீழ் மோசடி வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவர் கூறினார்.
“அதிவேகமாக லாபம் தருவதாகக் கூறும் எந்தவொரு இணையவழி முதலீட்டுத் திட்டங்களையும் நம்ப வேண்டாம். பணத்தைப் பரிமாற்றம் செய்வதற்கு முன், ‘Semak Mule’ செயலி மூலம் சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகள் மோசடிப் புகாரில் சிக்கியுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்” என்று டத்தோ யாயா ஒஸ்மான் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.




