Last Updated:
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையை ஷெப்பர்ட் பெற்றுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரொமாரியோ ஷெப்பர்ட் மலிங்கா, கம்மின்ஸ் போன்ற லெஜெண்ட் பவுலர்கள் வரிசையில் இணைந்துள்ளார்.
நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த மேட்ச்சில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். தொடக்க வீரர்கள் பிரான்டன் கிங் 35 ரன்களும், கேப்டன் ஹோப் 19 ரன்களும் எடுத்தனர்.
3 ஆவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய ஷிம்ரோன் ஹெட்மேயர் 36 பந்துகளில் 6 சிக்சர் 2 பவுண்ரியுடன் 64 ரன்கள் குவித்தார். ரோமன் பவெல் 24 ரன்களும், ரூதர் போர்டு 26 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 182 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஸ்காட்லாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சி 19 ரன்னும், பிரான்டன் மெக்கல்லன் 14 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் 24 பந்துகளில் 42 ரன்களும், டாம் ப்ரூஸ் 28 பந்துகளில் 35 ரன்களும் எடுத்தபோது அணி வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை ஸ்காட்லாந்து வீரர்கள் மத்தியில் ஏற்பட்டது. இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்தவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.
18.5 ஓவர்கள் வரை தாக்குப் பிடித்த ஸ்காட்லாந்து அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த போட்டியின்போது 17 ஆவது ஓவரை வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ரொமாரியோ ஷெப்பர்ட் வீசினார். அந்த ஓவரின் 2 ஆவது பந்தில் மேத்யூ கிராஸ் 11 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அடுத்த 2 பந்துகளில் மைக்கேல் லீஸ்க் மற்றும் ஆலிவர் டேவிட்சன் ஆகியோர் ஆட்டமிழந்து வெளியேற, ஹாட்ரிக் சாதனை படைத்தார் ரொமாரியோ ஷெப்பர்ட்
இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையை ஷெப்பர்ட் பெற்றுள்ளார்.

