Last Updated:
வரதட்சணை பணத்திற்காக அப்பாவி பெண்களை ஏமாற்றி 5 ஆண்டுகளுக்குள் மூன்று பேரை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் திருமணம் என்ற பெயரில் இளைஞர் ஒருவர் அப்பாவிப் பெண்களை ஏமாற்றி நகை, பணம் பறித்த பின்னர் அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மூன்று பெண்களும் காவல் நிலையத்தின் படியேறிய நிலையில், மோசடிக் குடும்பத்தின் மீது நடவடிக்கை பாயுமா?
மூன்று பெண்களை திருமணம் செய்து அவர்களை பரிதவிக்கவிட்டு, 4-வது திருமணத்துக்கு ஆயத்தமான கேடிதான் இவர். மொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்து வரதட்சணைக்காக திருமண நாடகம் நடத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளது. தங்களைப் போன்று வேறொரு பெண்ணை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றாக வந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். நடந்தது என்ன…?
உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள ஜகோராவைச் சேர்ந்தவர் சுனில் குமார். எந்தவொரு வேலைக்கும் செல்லாமல் வெட்டியாக ஊர் சுற்றியவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட இந்த திருமணத்தில் வரதட்சணையாக பெண் வீட்டாரிடம் இருந்து நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கமாக வாங்கியுள்ளனர். திருமணமான சில மாதங்களுக்குப் பின்னர் சுனில் குமார் கூடுதல் வரதட்சணைக் கேட்டு மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில் கூடுதல் பணம் வாங்கி வர வலியுறுத்தி, தாயார் வீட்டிற்கு அடித்து விரட்டியுள்ளார். பணத்துடன் திரும்பி வராததால், மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2021-ல் தனது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை சுனில் குமார் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவரது குடும்பத்தினரிடமும் வரதட்சணையாக நகைகள் மற்றும் 8 லட்சம் ரூபாய் ரொக்கம் வாங்கியுள்ளார். சில மாதங்களுக்குப் பின்பு, அந்தப் பெண்ணையும் கொடுமைப்படுத்தி சுனில் குமார் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். அவரும், நீதி வேண்டி காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்தின் படிகளில் ஏறி இறங்கியுள்ளார்.
கடைசியாக 2023ஆம் ஆண்டு ஜான்சியின் உள்ள பாபிபா பகுதியைச் சேர்ந்த பெண்ணை சுனில் குமார் மூன்றாவது திருமணம் செய்துள்ளார். அவரிடமும் வரதட்சணையாக நகைகள் மற்றும் எட்டு லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். மூன்றாவது மனைவி கர்ப்பமான நிலையில், சுனில் தனது வேலையை காட்ட ஆரம்பித்துள்ளார். அதுவரை, பெண்களை பிடிக்கவில்லை என்பதால் இருவரிடம் இருந்து அவர் விலகியதாக ஊர் மக்கள் நினைத்துள்ளனர்.
அதிலும், பெண் குழந்தையுடன் பரிதவித்த மூன்றாவது மனைவி மற்ற இரு பெண்களையும் ஒன்று சேர்த்து போராட்டத்துக்கு தயாராகியுள்ளார். பின்னர், மூன்று பேரும் ஒன்றாக சென்று தங்களது கணவன் மீது, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது, தாங்கள் சந்தித்த இன்னல்கள் குறித்து கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.
வரதட்சணை பணத்திற்காக அப்பாவி பெண்களை ஏமாற்றி 5 ஆண்டுகளுக்குள் மூன்று பேரை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் என்ற பெயரில் அப்பாவிப் பெண்களை ஏமாற்றிய இளைஞர்… 5 ஆண்டுகளில் 3 பெண்களிடம் நகை, பணத்தை பெற்று மோசடி…


