இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் என்ன?
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற டிரம்ப், இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 10 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக உயர்த்தினார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக 25 விழுக்காடு என மொத்தம் 50 சதவிகிதம் வரி வசூலிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார்.
இதனால், இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையான பாதிப்பை சந்தித்த நிலையில், இருநாடுகளுக்கு இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் முடிவாக, இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரி 18 விழுக்காடாக குறைப்பது உள்ளிட்ட அம்சங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணிகள் இறுதிகட்டத்தில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூகவலைதளப் பக்கத்தில் கடந்த வாரத்தில் பதிவிட்டார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், விரைவில் வர்த்தக ஒப்பந்தம் வெளியாகும் என்று வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இருநாடுகள் மேற்கொண்ட இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டறிக்கையாக வெளியிட்டுள்ளன. அதில், இந்தியா மற்றும் அமெரிக்காவின் பரஸ்பர வர்த்தக நலனை மனதில் வைத்து இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்தாண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி கூடுதல் வரி விதிப்பு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் திருத்தம் செய்வதன் மூலம், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகள், காலணி, பிளாஸ்டிக், கரிம வேதிப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், கைவினைப் பொருட்களுக்கான வரி 18 விழுக்காடாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் திருத்தம் செய்து, பொது மருந்துகள், வைரங்கள், ரத்தினங்கள், விமான உதிரி பாகங்களுக்கும் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான தொழில்துறை, உணவு மற்றும் வேளாண் பொருட்களுக்கு, இந்திய அரசு முழுமையான வரி விலக்கு அல்லது பகுதியான விலக்கு அளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, அமெரிக்காவில் இருந்து உலர்ந்த தானியங்கள், சிவப்பு சோளம், பாதாம், முந்திரி, பிஸ்தா உள்ளிட்ட கொட்டை வகைகள், பழங்கள், சோயா பீன் எண்ணெய், மதுபானம் உள்ளிட்ட பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து எரிசக்தி பொருட்கள், விமானம் மற்றும் உதிரி பாகங்கள், அரியவகை கனிமங்கள், தொழில்நுட்ப சாதனங்கள், நிலக்கரி உள்ளிட்டவற்றை அடுத்த 5 ஆண்டுகளுக்கு 500 பில்லியன் டாலர் அளவிற்கு இந்தியா வாங்குவதற்கு ஒப்புக் கொண்டதாகவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என இந்திய உறுதி அளித்ததால், 25 விழுக்காடு அபராத வரியை ரத்து செய்வதற்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையிலான இடைக்கால ஒப்பந்தம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்திய இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தம், மேக் இன் இந்தியா முயற்சியை மேலும் வலுப்படுத்தும் என்றும், இந்திய விவசாயிகள், தொழில்முனைவோர், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், புத்தாக்க நிறுவனங்கள், மீனவர்கள் என பல்வேறு துறையினருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
