Last Updated:
மாநிலங்களவையில் தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில் 37 இடங்கள் காலியாகும் நிலையில், தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாகும் 37 இடங்களை நிரப்புவதற்காக, மார்ச் மாதம் மாநிலங்களவைத் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி உள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 7 இடங்களும், தமிழ்நாட்டில் 6 இடங்களும், பிகார் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 5 இடங்களும் மாநிலங்களவையில் காலியாக இருக்கின்றன.
ஒடிசாவில் 4 இடங்களும், தெலங்கானா மற்றும் சத்தீஸ்கரில் தலா 2 இடங்களும், இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு இடமும் காலியாகின்றன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, அந்தியூர் செல்வராஜ், அதிமுகவைச் சேர்ந்த தம்பிதுரை, தமாகாவைச் சேர்ந்த ஜி.கே. வாசன் ஆகியோரது பதவிக்காலம் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
இதற்கிடையே, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே, மாநிலங்களவைத் தேர்தலை நடத்தி முடிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதற்காகத் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக அனைத்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதில், தகுதியான அதிகாரிகளைப் பரிந்துரை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


