Last Updated:
“மலேசியாவும், இந்தியாவும் ஒன்றை ஒன்று சிறப்பாக புரிந்து கொண்ட நாடுகள்.” மலேசியாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று, அந்நாட்டுக்கு பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்றுள்ளார்.
மலேசியா, கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் நேரில் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய வாழ் இந்தியர்கள் நடத்திய நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.
அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: “மலேசியாவும், இந்தியாவும் ஒன்றை ஒன்று சிறப்பாக புரிந்து கொண்ட நாடுகள். 2026-ன் முதல் வெளிநாட்டுப் பயணமே மலேசியா என்பது சிறப்பு. 2015ஆம் ஆண்டு உங்களை நான் சந்தித்தேன். அப்போது இந்தியா உலக பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்தது.
தற்போது இந்தியா உலக பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறிவருகிறது. உலகில் மொபைல் தயாரிப்பில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக இருக்கிறது.
தமிழ்க்கலாசாரம் உலகமயமானது. இந்திய குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் தமிழர்கள். மலேசியப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் மையம் அமைக்கப்படும்” இவ்வாறு பேசியுள்ளார்.


