Last Updated:
அமெரிக்காவில் இருந்து எரிசக்தி பொருட்கள், விமானம் மற்றும் உதிரி பாகங்கள், அரியவகை கனிமங்கள், தொழில்நுட்ப சாதனங்கள், நிலக்கரி உள்ளிட்டவற்றை அடுத்த 5 ஆண்டுகளுக்கு 500 பில்லியன் டாலர் அளவிற்கு இந்தியா வாங்குவதற்கு ஒப்புக் கொண்டதாகவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா -இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்த கவனம் செலுத்திய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள அவர், இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தால் விவசாயிகள், தொழில்முனைவோர், மீனவர்கள் உள்ளிட்டோருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்குமிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகள், காலணி, பிளாஸ்டிக், கரிம வேதிப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், கைவினைப் பொருட்களுக்கான வரி 18 விழுக்காடாக குறைக்கப்படும் என இடைக்கால ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்காவின் பரஸ்பர வர்த்தக நலனை மனதில் வைத்து இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்தாண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி கூடுதல் வரி விதிப்பு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் திருத்தம் செய்வதன் மூலம், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடைகள், காலணி, பிளாஸ்டிக், கரிம வேதிப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், கைவினைப் பொருட்களுக்கான வரி 18 விழுக்காடாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Great news for India and USA!
We have agreed on a framework for an Interim Trade Agreement between our two great nations. I thank President Trump for his personal commitment to robust ties between our countries.
This framework reflects the growing depth, trust and dynamism of… https://t.co/zs1ZLzamhd
— Narendra Modi (@narendramodi) February 7, 2026
இதேபோன்று, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் திருத்தம் செய்து, பொது மருந்துகள், வைரங்கள், ரத்தினங்கள், விமான உதிரி பாகங்களின் வரியும் 18 விழுக்காடாக குறைக்கப்படுகிறது. அதே சமயம், அமெரிக்காவில் இருந்து வடிகட்டிய தானியங்கள், சிவப்பு சோளம், பாதாம், முந்திரி, பிஸ்தா உள்ளிட்டவை அடங்கிய மரக்கொட்டைகள், பழங்கள், சோயா பீன் எண்ணெய், மதுபானம் உள்ளிட்ட பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


