கோலாலம்பூர், பிப்ரவரி 6:
மலேசியாவின் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (NCID), கடந்த சில நாட்களில் நடத்திய ஐந்து வெவ்வேறு சோதனைகளின் மூலம் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பைத் தகர்த்துள்ளது.
‘Op Allograpta’ என்ற குறியீட்டுப் பெயரில் நடந்த இந்த சோதனை கடந்த ஜனவரி 30-ஆம் தேதி, பகாங் மாநிலத்தின் பெந்தோங் பகுதியில் உள்ள கெந்திங் செம்பா (Genting Sempah) ஓய்விடத்தில் 40 முதல் 48 வயதுடைய மூன்று உள்ளூர் நபர்களைப் போலீசார் கைது செய்தனர் என்று, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் கூறினார்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, கோலாலம்பூர் ஜாலான் கூச்சாய் லாமா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து 265 கிலோ மெத்தாம்பெட்டமைன் (Methamphetamine) பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு RM13.25 மில்லியன் ஆகும்.
இந்தக் கும்பல் கிளந்தானிலிருந்து கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வந்துள்ளது.
வாடிக்கையாளர்களை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்க்க, வாடகை கார்களில் போதைப்பொருட்களை வைத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்திவிடுவார்கள். பின்னர் மற்ற உறுப்பினர்கள் வந்து அந்த வாகனத்தை எடுத்துச் செல்வார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் சுமார் 1.32 மில்லியன் பயனர்களுக்கு விநியோகம் செய்யக்கூடிய அளவுக்குப் பெரியதாகும்.
கைது செய்யப்பட்டவர்களில் முதல் நபர் கும்பலின் தலைவன் என்றும், மற்ற இருவர் கடத்துபவர்கள் (Transporters) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவருக்கும் ஏற்கனவே கொலை, போதைப்பொருள் எனப் பல குற்றப் பின்னணிகள் உள்ளன. கும்பல் தலைவன் மீது மட்டும் 14 குற்றப் பதிவுகள் உள்ளன.
மேலும் மூவரில் இருவருக்கு நடத்தப்பட்ட சிறுநீர் சோதனையில் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மூவர் மீதும் இன்று ஜாலான் டூட்டா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் 39B பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. இக்குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் குறைந்தது 12 கசையடிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது.




