கோலாலம்பூர்:
தற்போது மலேசிய ரிங்கிட் மற்றும் தாய்லாந்து பாட் இடையிலான பரிமாற்ற மதிப்பு RM1-க்கு 8.02 பாட் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் மலேசியர்கள், எல்லைக் கடந்து தாய்லாந்துக்குச் செல்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இன்று காலை 7 மணி முதலே கிளந்தான் மாநிலத்தின் ரந்தாவ் பாஞ்சாங் குடிநுழைவு, சுங்கவரி மற்றும் தனிமைப்படுத்தல் (ICQS) வளாகத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக் கிடப்பதைக் காண முடிந்தது.
குடும்பங்கள், நண்பர்கள் குழுக்கள் மற்றும் சிறு வணிகர்கள் எனப் பலரும் எல்லையைக் கடந்து தாய்லாந்துக்குள் நுழைந்தனர்.
பலர் தங்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் அன்றாடத் தேவைகளை வாங்குவதற்காகவும், அங்கேயே தங்கி ஓய்வெடுப்பதற்காகவும் தாய்லாந்துக்குச் செல்கின்றனர்.
“முன்பு ரிங்கிட் மதிப்பு குறைவாக இருந்தபோது வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது; ஆனால் இப்போது எங்களால் தாராளமாகப் பொருட்களை வாங்க முடிகிறது” என்று இரண்டு குழந்தைகளுடன் வந்திருந்த சித்தி ஆயிஷா ரஹிம் (34) மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவர் எல்லையைக் கடக்க சுமார் 3 மணிநேரம் காத்திருந்ததாகக் குறிப்பிட்டார்.
இந்தச் திடீர் பயண ஆர்வம் காரணமாக ரந்தாவ் பாஞ்சாங் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் வாடகை வாகனங்களுக்கான முன்பதிவுகள் பெருமளவில் அதிகரித்துள்ளன. மலேசியர்கள் கிளந்தானில் இருந்து மட்டுமல்லாமல், சிலாங்கூர் மற்றும் பகாங் போன்ற மற்ற மாநிலங்களில் இருந்தும் தாய்லாந்துக்குச் செல்வதாக குடிநுழைவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post வலுவடையும் ரிங்கிட்: தாய்லாந்தை நோக்கிப் படையெடுக்கும் மலேசியச் சுற்றுலாப் பயணிகள்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

